உயர்கல்விக்காக அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், 2025-ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க F-1 மாணவர் விசாக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 62 சதவீதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குடியேற்றக் கொள்கைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் சிஐஎஸ் (Center for Immigration Studies) என்ற அமைப்பின் மூத்த சட்ட ஆய்வாளர் ஜார்ஜ் ஃபிஷ்மேன் தயாரித்துள்ள அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க F-1 மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 22,149 ஆகக் குறைந்துள்ளது.
இது 2024-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 58,694 விசாக்களுடன் ஒப்பிடும்போது 62 சதவீத சரிவாகும். அதேபோல், சீன மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 2024-இல் 61,075 ஆக இருந்த நிலையில், 2025-இல் அது 40,034 ஆகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்திருக்கிறது.
அதேபோல, அமெரிக்க சிந்தனைக் குழுவின் (Think Tank) அறிக்கையை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க மாணவர் விசாக்களின் எண்ணிக்கை 62 சதவீதம் குறைந்துள்ளதும், சீனா மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த சரிவுக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க அரசு மாணவர் விசா வழங்கும் நடைமுறையில் பாதுகாப்பு ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள செயல்பாடுகள், ஆவணங்கள், கல்விப் பின்னணி உள்ளிட்ட அம்சங்கள் மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன. இது, விசா நேர்காணல்கள் தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அதேசயம், அமெரிக்க அரசு கல்லூரிகளுக்கு வழங்கிய நிதியை குறைத்ததால் பல பல்கலைக்கழகங்கள் தங்களின் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான இடங்களை குறைத்து கொண்டன. இதனால் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையும் குறைந்தது என கூறப்படுகிறது.
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அதிக மாணவர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க மாணவர் விசா ஒப்புதலில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சரிவு, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் கவலையடையச் செய்துள்ளது.