அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஒருவர் எழுப்பிய கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்கிற கொள்கையில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குடியேற்றக் கட்டுப்பாடுகள், விசா கட்டணத்தில் மாற்றம் என அவற்றில் அடக்கம். குறிப்பாக, அமெரிக்காவிற்கு வேலைக்காக வரும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் அமெரிக்க வாழ் இந்திய மாணவி ஒருவர் எழுப்பிய கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிசிசிப்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற’டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’என்ற நிகழ்வில் கலந்துகொண்ட மாணவி ஒருவர், துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் குடியேற்றம் குறித்து ஒரு கடினமான கேள்வியை எழுப்பியது வைரலானது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் அந்தப் பெண், வெளிநாட்டினரைத் தடுப்பதில் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாட்டைக் கேள்வி எழுப்பினார். "அமெரிக்காவில் வெளிநாட்டினர் அதிகமாகிவிட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள். இந்த எண்ணிக்கையை நீங்கள் எப்போது முடிவு செய்தீர்கள்? எங்களுக்கு ஏன் கனவை விற்றீர்கள்? இந்த நாட்டில் எங்களுடைய இளமையையும் பணத்தையும் செலவிடச் செய்து எங்களுக்கு ஒரு கனவை விதைத்தீர்கள். இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து, நீங்கள் கேட்கும் தொகையைச் செலுத்தி இங்கே வந்துள்ளோம். நீங்கள் எங்களுக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை. இப்போது வெளிநாட்டினர் அதிகமாக இருக்கின்றனர், அவர்களை வெளியேற்றப்போகிறோம் என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஜே.டி. வான்ஸ்,"சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இப்போது 10 பேர் அல்லது 100 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் வருவதனால், எதிர்காலத்தில் லட்சக்கணக்கில் வெளிநாட்டு மக்களை உள்ளே அனுமதிக்கப் போகிறோம் என்று அர்த்தமா? பல தசாப்தங்களுக்கு முன்பு இருந்த நடைமுறை இப்போது அமெரிக்காவுக்கு உதவாது. அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் என்னுடைய வேலை, முழு உலகத்தின் நலன்களைக் கவனிப்பதல்ல. அமெரிக்க மக்களின் நலனை கவனிப்பதுதான்" எனப் பதிலளித்தார்.
மாணவியின் எழுப்பிய கேள்விக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலரும் பதிவுகளையும் பதிந்து வருகின்றனர்.