கைவிலங்கிடப்பட்டு இந்திய மாணவர் கட்டாய வெளியேற்றம்.. மீண்டும் காட்டமாக எச்சரித்த அமெரிக்கா!
அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையில் பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கையும் ஒன்று. அவர்களைக் கைதுசெய்து கைகளில் விலங்கிட்டு அவர்களின் தாயகங்களுக்கு அமெரிக்க அரசின் சொந்த விமானச் செலவு மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றனர். சிலர், சிறைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தியர்களும் அதேபோல் கடந்த காலங்களில் மூன்று முறை அனுப்பப்பட்டனர். இது, விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் நியூவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு, தரையில் மண்டியிட வைத்து, கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோவைப் பதிவிட்ட மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) முன்னாள் மாணவரான குணால் ஜெயின்,"மாணவர் ஒரு குற்றவாளியைப்போல நடத்தப்பட்டார். அவர் கனவுகளைத் தேடி வந்தார். தீங்கு விளைவிக்கவில்லை. ஒரு என்ஆர்ஐ என்ற முறையில், நான் உதவியற்றவனாகவும், மனம் உடைந்தவனாகவும் உணர்ந்தேன். இது ஒரு மனித சோகம்" எனத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தப் பதிவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்ஜெய்சங்கரை டேக் செய்ததுடன், வேண்டுகோளும் விடுத்திருந்தார்.
இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூட, ”இந்திய மாணவர் ஒருவருக்கு நேர்ந்தவை பற்றிய வீடியோக்களைப் பார்த்தோம். இதுதொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். எப்போதும் இந்தியர்கள் நலன் பேணப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா எங்கள் நாட்டிற்கு சட்டப்பூர்வ பயணிகளை தொடர்ந்து வரவேற்கிறது. இருப்பினும், அமெரிக்காவிற்குச் செல்ல எந்த உரிமையும் இல்லை. சட்டவிரோத நுழைவு, விசாக்களின் துஷ்பிரயேகம் அல்லது அமெரிக்க சட்டத்தை மீறுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின்படி, டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம், ஜனவரி 2025இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அமெரிக்காவிலிருந்து 1,080 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது.