அமெரிக்கா | குண்டு காயங்களுடன் கிடந்த சடலம்.. மர்ம நபர்களால் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!
அமெரிக்காவில், கடந்த காலங்களில் இந்தியர்களின் மரணங்கள் அதிகரித்தவண்ணம் இருந்தன. தற்போதும் அதே தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆயுதம் ஏந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீண்டும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர், ரவி தேஜா (26). இவர் தனது மேல்படிப்புக்காக கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றார். தனது படிப்பை முடித்தவுடன் அங்கேயே வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் உடலில் குண்டு காயங்களுடன், ரவி தேஜா மர்மமான நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
அவரை மர்மநபர்கள் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். எதற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரம் தெரியாத நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவி தேஜா சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் சம்பவம், அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், ”நாட்டில் துப்பாக்கி கலாசாரத்திற்கு முடிவு கட்டப்படும்” என உறுதியளித்துள்ளார்.