ஜெய்சங்கர், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

IND - PAK மோதல் | ட்ரம்ப் தலையீடு இருந்ததா?.. உறுதியாக மறுத்த அமைச்சர் ஜெய்சங்கர்!

“இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவரும் நிலையில், அதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Prakash J

“இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஆனால், இதற்கு இந்தியா பலமுறை மறுப்பு தெரிவித்திருந்தது. பிரதமர் மோடியும் இதுதொடர்பாக சமீபத்தில் அதிபர் ட்ரம்பிடம் பேசி தெளிவுபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அதிபர் ட்ரம்ப், திரும்பத்திரும்ப இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை வர்த்தகம் தொடர்பான தொடர்ச்சியான தொலைபேசி அழைப்புகள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறியிருப்பது மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

ஜெய்சங்கர், ட்ரம்ப்

இதற்கிடையே அமெரிக்காவிற்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை, காஷ்மீரில் சுற்றுலாவை அழிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட பொருளாதாரப் போர்" எனத் தெரிவித்துள்ளார். மேலும்,பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் பயங்கரவாதத்திற்கு பதிலளிப்பதைத் தடுக்க அணு ஆயுத அச்சுறுத்தலை அனுமதிக்கக் கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இஸ்லாமாபாத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு, புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்த தனது நேரடிக் கணக்கைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தீவிரமடைந்த பிறகு, வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர் நிறுத்தத்தை ஏற்க கட்டாயப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதை அமைச்சர் நிராகரித்தார். இந்தியாவைப் பொறுத்தவரை வர்த்தகத்திற்கும் போர் நிறுத்தத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜெய்சங்கர், ட்ரம்ப்

இதுகுறித்து அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “இது ஒரு பொருளாதாரப் போர் நடவடிக்கை. பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக இருந்த காஷ்மீரில் சுற்றுலாவை அழிக்கும் நோக்கம் கொண்டது. மக்கள் கொல்லப்படுவதற்கு முன்பு அவர்களின் நம்பிக்கையை அடையாளம் காணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால், மத வன்முறையைத் தூண்டும் நோக்கமும் கொண்டது. எனவே பயங்கரவாதிகள் தண்டனையின்றி செயல்பட அனுமதிக்க முடியாது என்று நாங்கள் முடிவு செய்தோம். அது சவால் செய்யப்பட வேண்டிய ஒரு முன்மொழிவு, அதைத்தான் நாங்கள் செய்தோம்” என அதில் தெரிவித்துள்ளார்.