இந்தியா - பாகிஸ்தான் | தாக்குதல் நிறுத்தம் குறித்துப் பேசிய டொனால்டு ட்ரம்ப்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இரு நாடுகளுக்கிடையே தாக்குதலைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்க மத்தியஸ்தம் செய்தது.
இதையடுத்து, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 10ஆம் தேதி அறிவித்தார். அதன்பேரில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டன. இதையடுத்து, மே 10ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமல் ஆனது. எனினும், எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத போரை நிறுத்திவிட்டதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்திவிட்டேன். அணு ஆயுதப் போருக்கு இருந்த வாய்ப்பைத் தடுத்ததில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகித்தது.
சண்டையை நிறுத்தாவிட்டால், இருநாடுகளுடனும் வர்த்தகம் செய்ய மாட்டேன் என எச்சரித்தேன். மோதல் தொடர்ந்தால் வர்த்தகம் தொடராது என்று இரு நாடுகளிடமும் தெரிவிக்கப்பட்டது. வணிகத்தைப் பயன்படுத்திப் போரை நிறுத்தியதில் என்னைப்போல் யாரும் கிடையாது. சண்டை நிறுத்தம் ஒன்றே தீர்வு என்பதை வலியுறுத்தினேன்” எனத் தெரிவித்தார்.