செய்தியாளர் பாலவெற்றிவேல்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்களை திரும்ப அழைக்க இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிரம்ப் அரசு உடனான வர்த்தக போரை தவிர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் புதிதாக அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிராக, கொள்கை ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மெக்சிகோ எல்லையை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதோடு வரும் நாட்களில் அந்தப் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களுக்கு எதிரான தணிக்கை மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. மெக்சிகோ, குவாத்தமலா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில், சட்ட விரோதமாக புகுந்தவர்கள் அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த ட்ரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் பைடன் ஆட்சி காலத்தில் அவை கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக அமெரிக்க அரசு அடையாளம் கண்டுள்ள 18,000 இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்க இந்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் ட்ரம்ப் பதவியேற்பில் கலந்து கொண்ட நிலையில் இதுகுறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதார பாதிப்புகளைத் தவிர்க்கவும், இருதரப்பு வர்த்தக உறவுகளை பாதுகாக்கவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் குடி பெயர்ந்துள்ள சட்டவிரோத இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 2022 வரை சுமார் 2,20,000 சட்டவிரோத இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்ந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 1,100 இந்தியர்கள் நாடு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களில் மூன்று சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
18000 இந்தியர்கள் அழைத்துக் கொள்வதாக கூறப்பட்டாலும் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இருந்தாலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் அரசிடம் நல்லுறவு கொள்வதற்கு இந்தியா விரும்புவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 2023 ஆம் ஆண்டு எச்1பி விசா பெற்ற 3 லட்சத்து 86 ஆயிரம் பேரில் நான்கில் மூன்று பங்கு இந்தியர்கள் என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை திரும்ப அழைத்து, படிப்புக்காகவும், வேலைக்காகவும் சட்டபூர்வமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு டிரம்ப் ஆதரவு தெரிவிப்பார் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கையை இந்தியா எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.