ட்ரம்ப், மோடி, புதின் தி ஃபெடரல்
உலகம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில்லையா? ட்ரம்ப் கருத்துக்கு இந்தியா, ரஷ்யா எதிர்வினை

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு இந்தியாவும் ரஷ்யாவும் எதிர்வினையாற்றியுள்ளன. முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

PT WEB

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெயை விற்று, அதில் கிடைக்கும் வருவாயை உக்ரைன் போருக்கு ரஷ்யா பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீதான வரிவிதிப்பை 50 சதவிகிதமாகவும் அவர் அதிகரித்தார். இதனால் இரு நாடுகள் இடையேயான உறவிலும் வர்த்தகப் பேச்சுவார்த்தையிலும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதில் தனக்கு மகிழ்ச்சியில்லை எனவும், எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி தனக்கு உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். மோடி தனது நண்பர் என்றும் தங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப்

இது சர்வதேச அரசியலில் பேசுபொருளான நிலையில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கொள்கை, மக்களின் நலன்களைப் பாதுகாப்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, பல நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடரும் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இதேபோல், இந்தியா தங்கள் நாட்டு நலன் அடிப்படையிலேயே எரிபொருள் வாங்குவதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தார். இந்தியாவுக்கும் தங்களுக்குமான இரு தரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பட்டு வருவதாகவும் ரஷ்ய தூதர் தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கண்டு பிரதமர் மோடி பயந்துவிட்டதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவுக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில் பிரதமர் மோடியோ அவருக்கு வாழ்த்து மற்றும் பாராட்டுச் செய்திகளை அனுப்பி வருவதாக சாடினார்.