அசிம் முனீருக்கும் இம்ரான் கானுக்கும் இடையே கடந்த காலங்களில் என்ன பிரச்னை நிகழ்ந்தது? ஏன் அசிம், முனீர் இம்ரானைக் குறிவைக்கிறார் என்பது குறித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளைக் காண்போம்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஊழல் உட்பட பல வழக்குகளில் சிக்கி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் உள்ள நிலையில், அவரைப் பற்றி மரணம் பற்றிய வதந்திகள் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் பரவியது. குறிப்பாக, கடந்த 47 நாட்களாக அவரது உறவினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என யாரும் அவரை தொடர்கொள்ளாத நிலையில், இது அந்த மர்மத்திற்கு வலுசேர்ப்பதாக இருந்தது.
இந்த நிலையில், இம்ரான் கானின் சகோதரி ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர், அவரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இம்ரான் கான் அறிக்கை ஒன்றை அளித்ததாகவும் அவர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், ”அசிம் முனீர் ஒரு மனநிலை சரியில்லாத மனிதர். அவரது தார்மீக திவால்நிலை பாகிஸ்தானில் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியின் முழுமையான சரிவுக்கு வழிவகுத்தது. அவருக்கு பாகிஸ்தான் மீது எந்த அக்கறையும் இல்லை. அவர் வேண்டுமென்றே ஆப்கானிஸ்தானுடன் பதற்றங்களைத் தூண்டிவிட்டு மேற்கத்திய சக்திகளை மகிழ்விக்க கொள்கைகளைப் பின்பற்றினார். நான் நான்கு வாரங்களாக ஒரு மனிதனுடனும் தொடர்புகொள்ளாத ஓர் அறைக்குள் முழுமையான தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். வெளி உலகத்திலிருந்து நான் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளேன். சிறை கையேட்டின்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைத் தேவைகள்கூட என்னிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன” என அதில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அவர் தனது கடைசிப் பதிவின்போதும் அசிம் முனீரையே குற்றஞ்சாட்டியிருந்தார். சிறையில் தனக்கு ஏதாவது நிகழ்ந்தால், அதற்கு முனீரே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டியிருந்தார். ”இராணுவ அமைப்பு எனக்கு எதிராக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு இப்போது என்னைக் கொலை செய்வதுதான் மிச்சம். எனக்கோ அல்லது என் மனைவிக்கோ ஏதாவது நடந்தால், ஜெனரல் அசிம் முனீரே முழுப் பொறுப்பாவார்” என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் அவருடைய அசிம் பற்றிய பதிவு வந்துள்ளது.
அசிம் முனீருக்கும் இம்ரான் கானுக்கு நீண்டநாட்களாகவே பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்குள் கடந்த காலங்களில் என்ன பிரச்னை நிகழ்ந்தது? ஏன், அசிம் முனீர் இம்ரானைக் குறிவைக்கிறார் என்பது குறித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளைக் காண்போம்.
இம்ரான் கான் பிரதமராக இருந்த சமயத்தில், அதாவது 2019ஆம் ஆண்டில், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவரது வட்டாரத்தைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் முனீர் ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இது, இம்ரான் கானுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) தலைவராகப் பொறுப்பேற்று எட்டு மாதங்கள் பதவி வகித்த நிலையில், அப்பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கியுள்ளார். அவரது நீக்கத்திற்கு இராணுவம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
ஆனால், தனது மனைவியின் குற்றச்சாட்டுக்காக நான் அவரைப் பதவியிலிருந்து விலக்கவில்லை. இது முற்றிலும் தவறானது என இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் அசிம் முனீரை பாதுகாப்புப் படைத் தலைவராக (சிடிஎஃப்) நியமிக்கும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர், நாட்டின் முப்படைகளான இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையை கட்டுப்படுத்த முடியும். மேலும் 2030 வரை பணியாற்ற முடியும். அப்படி, மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கும் அசிம் முனீர், பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டுதான் இம்ரான் கானைப் பழிவாங்குவதாகக் கூறப்படுகிறது.