47 நாட்களாக இம்ரானை தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கும் உறவினர்கள்.. அச்சத்தில் மகன்கள்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பற்றி மரணம் பற்றிய தகவல்களும் வதந்திகளும் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அவருடைய மகன்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஊழல் உட்பட பல வழக்குகளில் சிக்கி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் உள்ள நிலையில், அவரைப் பற்றி மரணம் பற்றிய தகவல்களும் வதந்திகளும் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த 47 நாட்களாக அவரது உறவினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என யாரும் அவரை தொடர்கொள்ளாத நிலையில், இது அந்த மர்மத்திற்கு வலுசேர்ப்பதாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற ஆணைகள் இருந்தும் இம்ரானைப் பார்க்க அவரது உறவினர்களுக்கு அனுமதிக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளால் மீளமுடியாத ஏதோ ஒன்று மறைக்கப்படுவதாக இம்ரான் கானின் மகன்களான காசிம் மற்றும் சுலைமான் ஆகியோர் அஞ்சுகின்றனர்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸுக்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், “இன்று, அவரது நிலை குறித்து சரிபார்க்கக்கூடிய எந்த தகவலும் எங்களிடம் இல்லை. எங்களிடமிருந்து ஏதோ மீளமுடியாத ஒன்று மறைக்கப்படுகிறது என்பதால் எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. எங்கள் தந்தை பாதுகாப்பாக இருக்கிறாரா, காயமடைந்தாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்று தெரியாமல் இருப்பது ஒரு வகையான உளவியல் சித்திரவதையாகும். கடந்த இரண்டு மாதங்களாக அவருடன் சுயாதீனமாக சரிபார்க்கப்பட்ட தொடர்பு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானின் முன்னாள் மனைவியும் காசிம் மற்றும் சுலைமான் கானின் தாயாருமான ஜெமிமா கோல்ட்ஸ்மித், "மகன்கள் இருவரும் அவருடன் தொலைபேசியில் பேசக்கூட அனுமதிக்கப்படவில்லை. யாருக்கும் அனுமதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

