’டென்மார்க் இளவரசியை ட்ரம்ப் மகன் மணந்தால்.. கிரீன்லாந்து வரதட்சணை’ வழங்கப்படும் என்கிற எக்ஸ் தளப் பதிவு வைரலாகி வருகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா அடுத்த பார்வை கிரீன்லாந்து மீது விழுந்துள்ளது. கிரீன்லாந்துக்கு சமீபகாலமாகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உரிமை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் கூட அவர், “நான் எளிமையான முறையில் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அது முடியாவிட்டால் கடினமான வழியில் அதைச் செய்வோம். பேச்சுவார்த்தை மூலம் கிரீன்லாந்தை இணைக்க முடியாவிட்டால் அமெரிக்கா கடுமையான வழியில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளார். அதேபோல், கிரீன்லாந்தை விலை கொடுத்து வாங்கவே அதிபர் விரும்புவதாகவும், ஆனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ராணுவ நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது மீண்டும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில் டென்மார்க் இதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ’கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்றால் முதலில் சுட்டுத்தள்ளுங்கள்... பிறகு பேசுங்கள்’ என ராணுவ வீரர்களுக்கு டென்மார்க் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டென்மார்க்கின் இளவரசியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகன் திருமணம் செய்துகொண்டால், வரதட்சணையாக கிரீன்லாந்து கொடுக்கப்படுமா என்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மெட்டாபொலிட்டிகல் நையாண்டி என்கிற ஒரு எக்ஸ் தளக் கணக்கு, ’கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், டென்மார்க்கின் இளவரசியான இசபெல்லாவை, ட்ரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் மணமுடிக்க வேண்டும்; இசபெல்லாவை திருமணம் செய்தால், அமெரிக்காவுக்கு வரதட்சிணையாக கிரீன்லாந்து அளிக்கப்படும்’ எனப் பதிவிட்டிருந்தது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மில்லியன் கணக்கான பார்வைகளையும், எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது. அதேநேரத்தில் பரவலான விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளது. பயனர் ஒருவர், ’இது புவிசார் அரசியல் அல்ல, அது இடைக்கால ரசிகர் புனைகதை. கிரீன்லாந்து ஒரு பேரம் பேசும் சிப் அல்ல, டென்மார்க்கின் இளவரசி இசபெல்லா ஒரு சிப்பாய் அல்ல, பரோன் ட்ரம்ப் ஒரு இராஜதந்திர கருவி அல்ல. திருமணங்கள் மூலம் நாடுகள் பரிமாறிக்கொள்ளப்படுவதில்லை, இது 1400கள் அல்ல” எனப் பதிவிட்டுள்ளார்.
கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் காலணி நாடாக இருந்தது. ஆனால், 2009ஆம் ஆண்டு க்ரீன்லாந்து சுயாட்சி பெற்றது. முழு சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொள்ளவும் க்ரீன்லாந்துக்கு உரிமை இருக்கும் நிலையில், டென்மார்க் வழங்கும் மானிய உதவிகளுக்காக அந்நாட்டை க்ரீன்லாந்து சார்ந்திருக்கிறது. சுருக்கமாக, டென்மார்க் அரசின் கீழ் கிரீன்லாந்த் சுயாட்சியுடன் செயல்படுகிறது. ஆனால், பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான அதிகாரங்கள் டென்மார்க் வசமே உள்ளன.
இதற்கிடையே, கிரீன்லாந்து இணைப்பு தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார். இதனை டென்மார்க் பாதுகாப்பு துறை அமைச்சர் ட்ரோல்ஸ் லண்ட் பவுல்சன் வரவேற்று உள்ளார். எனினும் இந்த சந்திப்பு எங்கு, எப்போது நடைபெறும் என்ற எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து டென்மார்க் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி. ராஸ்மஸ் ஜர்லோவ், ‘அமெரிக்கா எங்கள் மீது ராணுவ வீரர்களை கொண்டு மிரட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தொடர்ந்து விசுவாசத்துடன் இருந்தது தவிர, உங்களுக்கு எதிராக வேறெதுவும் செய்யாத நாடுகளை, கூட்டணி நாடுகளை நீங்கள் மிரட்டுவீர்கள் என்பது அதிர்ச்சி தருகிறது. நினைத்து பார்க்க முடியாதது. இது பிற நாடுகளுக்கும்கூட வருத்தம் ஏற்படுத்தும். ஏனெனில், டென்மார்க் மீது இதுபோன்று படைகள் கொண்டு மிரட்டல் விடப்படும் என்றால், எந்த நாடும் பாதுகாப்பாக இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.