”முதலில் துப்பாக்கிச் சூடுதான்” - கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கு டென்மார்க் பதிலடி!
”டென்மார்க் பிரதேசத்தை (கிரீன்லாந்து) ஆக்கிரமித்தால், உடனடியாக சண்டையிட்டு, தங்கள் தளபதிகளின் உத்தரவுகளுக்கு காத்திருக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போதைப் பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்த வெனிசுலா உறுதுணையாக இருந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், கடந்த 3ஆம் தேதி அந்நாட்டு ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. அங்கு அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, கிரீன்லாந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. காரணம், அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்த நாடுகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், கிரீன்லாந்து பற்றிய செய்திகள் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. “தேசிய பாதுகாப்பு கோணத்தில் பார்த்தால் கிரீன்லாந்து நமக்கு அவசியம். நமக்கு கிரீன்லாந்து நிச்சயமாக தேவை” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். இதற்கிடையே, ”கிரீன்லாந்து எங்களுக்கு தேவை. அதற்கான பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தவிருக்கிறோம். இரண்டு மாதத்தில் இதற்கான டீல் முடிவுக்கு வரும். இது சர்வதேச சட்டத்தை மதித்தே நடக்கும்” என ட்ரம்ப் கடந்த வாரம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதுமீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் டென்மார்க் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
”டென்மார்க் பிரதேசத்தை (கிரீன்லாந்து) ஆக்கிரமித்தால், உடனடியாக சண்டையிட்டு, தங்கள் தளபதிகளின் உத்தரவுகளுக்கு காத்திருக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பனிப்போர் காலத்தைச் சேர்ந்த 1952 ஆம் ஆண்டு உத்தரவு, ஒரு வெளிநாட்டுப் படை டென்மார்க் பிரதேசத்தை அச்சுறுத்தினால், கட்டளைகளுக்காகக் காத்திருக்காமல் துருப்புக்கள் முதலில் சுட வேண்டும்" என்று வெளிப்படையாகக் கூறுகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் 1940இல் நாஜி ஜெர்மனி டென்மார்க்கைத் தாக்கியபோது உருவாக்கப்பட்டது, இது ஸ்காண்டிநேவிய நாட்டில் தகவல் தொடர்பு ஓரளவு சரிவுக்கு வழிவகுத்தது, இன்றுவரை அது அப்படியே உள்ளது.
அதேநேரத்தில்ல் அமெரிக்கா 1951 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் உறுப்பினராக உள்ளது, இது கிரீன்லாந்தில் இராணுவ நிலைகளை அமைப்பதற்கான பரந்த உரிமைகளை அந்தப் பிரதேசம் மற்றும் டென்மார்க்கின் ஒப்புதலுடன் அனுமதிக்கிறது. என்றாலும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியவை வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) உறுப்பினர்கள். நேட்டோ கூட்டமைப்பின் முக்கிய நோக்கமே ஓர் உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதை எல்லா உறுப்புநாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதி ஒன்றாக நிற்க வேண்டுமென்பதுதான். இதில் அமெரிக்காவும் இருக்கிறது; டென்மார்க்கும் இருக்கிறது. இத்தகைய சூழலில் அமெரிக்காவே தனது கூட்டாளியின் பகுதியை தனதாக்கிக் கொள்ளப் பார்ப்பது எப்படி சரியாக இருக்கும் என கேள்வி எழுப்புகின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
கிரீன்லாந்து மீது அமெரிக்கா குறிவைப்பது ஏன்?
கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் காலணி நாடாக இருந்தது. ஆனால், 2009ஆம் ஆண்டு க்ரீன்லாந்து சுயாட்சி பெற்றது. முழு சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொள்ளவும் க்ரீன்லாந்துக்கு உரிமை இருக்கும் நிலையில், டென்மார்க் வழங்கும் மானிய உதவிகளுக்காக அந்நாட்டை க்ரீன்லாந்து சார்ந்திருக்கிறது. சுருக்கமாக, டென்மார்க் அரசின் கீழ் கிரீன்லாந்த் சுயாட்சியுடன் செயல்படுகிறது. ஆனால், பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான அதிகாரங்கள் டென்மார்க் வசமே உள்ளன. அத்தகைய க்ரீன்லாந்துதான் அமெரிக்காவுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. ஏனெனில், க்ரீன்லாந்து வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்திருக்கிறது. எனவே, க்ரீன்லாந்தை பிராந்திய ரீதியிலான பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக அமெரிக்கா கருதுகிறது

