Antonio Guterres
Antonio Guterres file image
உலகம்

குழந்தைகளின் சுடுகாடாக மாறும் காஸா.. இந்த துயரத்திற்கு ஒரு முடிவேயில்லையா.. போர் நிறுத்தம் எப்போது?

யுவபுருஷ்

அக்டோபர் மாதம் 7ம் தேதி காலை 6 மணியளவில் தொடங்கிய யுத்தம் இந்த மாதம் 7ம் தேதியை தொட்டுள்ளது. ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த போரில் அப்பாவி பிஞ்சுகள் அதிகம் கொல்லப்பட்டுள்ள செய்தி கேட்டு உலக நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன. கடந்த அக்டோபர் 7ம் தேதி 1,400 இஸ்ரேலியர்களை கொன்றதோடு, சுமார் 240 பேரை பணையக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துச்சென்றது. அன்றைய தினம் முதல், பிடித்துச்செல்லப்பட்டவர்களை மீட்போம், ஹமாஸை ஒழிப்போம் என்று ரணகொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல்.

இந்நிலையில், நடந்து வரும் போரில் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது பாலஸ்தீன சுகாதாரத்துறை. இதில் 4,104க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பலியாகியுள்ளனர் என்பதுதான் வேதனையளிக்கும் செய்தியாக உள்ளது.

இந்த தகவலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ கிட்டாரஸ், ”குழந்தைகளுக்கான மயானமாக காஸி மாறிவருகிறது. உடனடி போர் நிறுத்தம் தேவை” என்று கூறியுள்ளார்.

ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த போரில், தற்போது காஸா பகுதி வடக்கு தெற்காக பிரிக்கப்பட்டு, இஸ்ரேல் ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தொடர் தாக்குதலால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்குமோ என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் ஐநா பொதுச்செயலாளர், ஹமாஸ் அமைப்பினர், தாங்கள் பிடித்து வைத்துள்ள பணையக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றுள்ளார். மறுபுறமோ, ஹமாஸை ஒழித்துக்கட்டும் வரை ஓயமாட்டோம் என்கிறது இஸ்ரேல்.

ஆனால், இதுவரை இல்லாத மாற்றமாக, காஸாவுக்கான மனிதாபிமான உதவிகளுக்கும், இஸ்ரேல் பணையக்கைதிகள் வெளிவருவதற்கும் சிறிது நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அப்படிப்பார்த்தால், தற்போதைக்கு போர் நிறுத்தம் என்பதில் இஸ்ரேலுக்கு கொஞ்சமும் ஆர்வமில்லை என்பதே வெளிப்படையாகிறது.