கலீல் அல்-ஹய்யா reuters
உலகம்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு.. யார் இந்த கலீல் அல்-ஹய்யா?

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் நீடித்த இந்தப் போரில், அங்கு இதுவரை 73,098 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Prakash J

இஸ்ரேல் போருக்குப் பிறகு, பாலஸ்தீனத்தின் காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பானது, தனது அரசியல் பிரிவின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா (Khalil al-Hayya) தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஸாவில் தனது அரசாங்கத்தைக் கலைத்துவிட்ட சூழலில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற தொழில்நுட்பக் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ஹமாஸ் தயாராகி வரும் நிலையில், உலகளாவிய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அல் ஹய்யாவின் நியமனம் வந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இஸ்ரேல் - காஸா போர்

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் காஸாவை, 2007 முதல் ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வருகின்றனர். அதேநேரத்தில், காஸாவை ஆக்கிரமிக்கவும் இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகையால், இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

ட்ரம்ப் தலைமையில் 20 அம்ச திட்டம்

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் நீடித்த இந்தப் போரில், அங்கு இதுவரை 73,098 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து இஸ்ரேல் ஆதரவுடன், ’ட்ரம்பின் தலைமையில் இடைக்கால அரசு’ என்பது உள்ளிட்ட 20 அம்ச திட்டத்தை, காஸா போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா முன்மொழிந்தது. இதற்கு ஹமாஸ் அமைப்பு ஆதரவு தெரிவிக்காமல் சற்று விலகியே இருக்கும் நிலையில், அதன் ஆயுதக் களைவு குறித்த கேள்வி இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

இதையும் படிக்க: உருவாகப்போகும் புதிய தேசம்.. நாலாபுறமும் நெருக்கடி.. PAK-க்கு சுத்துபோட்ட 4 பிரிவினர்!

காஸாவில் அரசைக் கலைத்த ஹமாஸ்

இந்த நிலையில்தான், காஸாவில் தனது அரசாங்கத்தைக் கலைத்துவிட்டதாகவும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற தொழில்நுட்பக் குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைக்கத் தயாராகி வருவதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஹமாஸ் தலைவராக அல்-ஹய்யா தேர்வு

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களாக இருந்த இஸ்மாயில் ஹனியே மற்றும் யஹ்யா சின்வார் ஆகியோர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஹமாஸை இடைக்காலக் குழு வழிநடத்தி வந்த நிலையில், முறைப்படியான வாக்கெடுப்பு மூலம் கலீல் அல்-ஹய்யா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹமாஸின் பொது ஷூரா கவுன்சில் நடத்திய வாக்கெடுப்பில், முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மெஷாலை வீழ்த்தி அல்-ஹய்யா வெற்றி பெற்றார். உலகளாவிய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அல் ஹய்யாவின் நியமனம் வந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிக்க: புதிய 1 ரூபாய் நாணயம்.. வடிவமைப்பை மாற்றிய அரசு.. IND-க்கு மகிழ்ச்சி.. நேபாளத்தில் எதிர்ப்பு!

யார் இந்த கலீல் அல்-ஹய்யா?

ஹமாஸின் அரசியல் தலைமையின் நீண்டகால உறுப்பினரான கலீல் அல் ஹய்யா, 1960-இல் காஸாவின் ஷஜாய்யா மாவட்டத்தில் பிறந்தவர். இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் ஹதீஸ் துறையில் முனைவர் (PhD) பட்டம் பெற்றவர். 1980-களில் முஸ்லிம் பிரதர்ஹுட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர், 1987-இல் ஹமாஸ் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே அதில் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். அக்குழுவின் கொள்கையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.

அந்த அமைப்பின் மிகவும் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இஸ்ரேலின் 'மிகவும் தேடப்படும்' பட்டியலில் உள்ள தலைவர்களில் அல் ஹய்யாவும் ஒருவர். இஸ்ரேலுடனான மோதல்களின்போது, ​​அவரது வீடுகளும் அலுவலகங்களும் இஸ்ரேலிய படைகளால் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

விரைவில் புதிய தலைமுறையில் புதிய தொடர்கள்!

உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் எழுதும் மனதைக் கவரும் தொடர்கள், விரைவில் நமது ’புதிய தலைமுறை’யில் இணையதளத்தில் வெளிவர இருக்கிறது. அந்த வகையில், திங்கள்தோறும் பி.கே.பழனிக்குமார் எழுதும் ’ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு’ம், புதன்தோறும் டாக்டர் வி.அமுதன் எழுதும் ’சக்கரங்கள் சொல்லும் கதை’யும், வெள்ளிதோறும் சுகுணா திவாகர் எழுதும் ’நிறம் மாறும் சினிமா’ ஆகிய தொடரும் இடம்பெற இருக்கிறது.