காஸாவுக்கு பாகி. செல்லுமா? ட்ரம்பின் கனவுக்குத் தடை? உள்ளூரில் நடமாடும் ஹமாஸ் தலைவர்!
ஹமாஸ் தலைவர் கலீத் மஷாலின் சிறப்பு பிரதிநிதியான நஜி ஜாகீர் பாகிஸ்தானில் காணப்படும் செய்தி, பேசுபொருளாகி உள்ளது. இதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் - காஸா இடையே நீண்டகாலம் நடைபெற்ற போர் அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் 20 அம்சத் திட்டத்தின்படி, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் மறுகட்டமைப்பு மற்றும் பொருளாதார மீட்சியை மேற்பார்வையிடும் முயற்சி தொடர்பாக பாகிஸ்தானிடம் ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம் இந்த பணியில் சேர தயங்கக்கூடும் என்றும், பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் மக்களிடையே பொதுமக்களின் கோபத்தை அது தூண்டக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தவிர, காஸாவிற்கு வீரர்களை அனுப்புவது தொடர்பாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ உயர் தலைவர் அசிம் முனீர் ஆகியோரின் தலைமைக்கு இடையே கடுமையான அரசியல் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்று வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் கலீத் மஷாலின் சிறப்பு பிரதிநிதியான நஜி ஜாகீர் பாகிஸ்தானில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் பஞ்சாபின் குஜ்ரன்வாலாவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத முகாமில் நடந்த ஒரு நிகழ்விற்கு அவர் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ஹமாஸ் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு இடையிலான உறவுகள் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசுகளிடமும் விவாதங்களைத் தூண்டியுள்ளது.
ஆனால், ஹமாஸ் தலைவர் பாகிஸ்தானுக்கு வருவது இது முதல் முறையல்ல. மத்திய கிழக்கு ஊடக ஆராய்ச்சி நிறுவனத்தின் (MEMRI) செப்டம்பர் 2025 அறிக்கையின்படி, ஏப்ரல் 2024இல், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் விருந்தினராக ஜாகீர் தோன்றியதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் பயங்கரவாத குழுக்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காஸாவிற்கு பாகிஸ்தான் துருப்புக்களை அனுப்பும் எந்தவொரு முடிவையும் அது சிக்கலாக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., ஹமாஸ் இயக்கத்தினருக்கு ரகசியமாக பயிற்சி அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அந்தக் குழுவிற்கு புகலிடம், வளங்கள் மற்றும் இராணுவ அறிவை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் டி.பி. பாண்டேவும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானியும் இதை மறுத்திருப்பதுடன், இதுதொடர்பாக அவர்கள் கேள்வியும் எழுப்பினர். என்றாலும், பாகிஸ்தானில் நடமாடும் ஜாகீரின் காணொளி இஸ்ரேலையும், அமெரிக்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

