புதிய 1 ரூபாய் நாணயம்.. வடிவமைப்பை மாற்றிய அரசு.. IND-க்கு மகிழ்ச்சி.. நேபாளத்தில் எதிர்ப்பு!
நேபாள அரசு புதிய ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்த சர்ச்சைக்குரிய வரைபடம் மாற்றப்பட்டு, புதிதாக மடாலயம் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, நேபாளத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம்முடைய அண்டை நாடுகளில் ஒன்று, நேபாளம். இந்தியா – நேபாள எல்லையில் உள்ள லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை இந்தியா பராமரித்து வருகிறது. இப்பகுதிகளை தங்கள் எல்லைப் பகுதிக்குள் சேர்த்து அதற்கான வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதை நேபாள அரசு வாடிக்கையாக வைத்து வருகிறது. இந்த நிலையில், நேபாள அரசு புதிய ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்த சர்ச்சைக்குரிய வரைபடத்திற்குப் பதிலாக லோ கியாகர் மடாலயம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாற்றம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தூண்டியுள்ளதுடன், சர்ச்சைக்குரிய நிலப்பரப்பு குறித்த காத்மாண்டுவின் நிலைப்பாடு பற்றிய கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது. லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகள் தனது பிரதேசம் என நேபாளம் நீண்டநாட்களாக உரிமைகோரி வருகிறது. ஆனால் அவை தங்களுக்குச் சொந்தமானவை என்று இந்தியா கூறிவருகிறது. 2020 மே மாதம், அப்போதைய கே.பி. ஓலி தலைமையிலான அரசாங்கம் இந்தப் பகுதிகளை நேபாளத்தின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் சேர்த்திருந்தது. அதுமுதல், இவ்விவகாரம் தொடர்பாக இருதரப்பிலும் ராஜாங்க உறவுகள் சீரான நிலையில் இல்லை.
இந்த நிலையில், நேபாளத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களை அச்சிடுவதற்கான நேபாள ராஷ்டிர வங்கியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாணயங்களின் அளவு மற்றும் எடையைக் குறைக்கும் பொருட்டு, பழைய வடிவமைப்புகளுக்குப் பதிலாக புதிய வடிவமைப்புகளை மத்திய வங்கி முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஒரு ரூபாய் நாணயம் 4 கிராமுக்கு பதிலாக 3.2 கிராம் எடையுடனும், இரண்டு ரூபாய் நாணயம் 5 கிராமுக்கு பதிலாக 3.8 கிராம் எடையுடனும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
நேபாள அரசின் இந்த முடிவின்படி, ஒரு ரூபாய் நாணயத்திலிருந்து நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் நீக்கப்பட இருப்பதாகவும், அதாவது லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபானி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்திற்குப் பதிலாக, முஸ்டாங் மாவட்டத்தின் மராங் கிராமத்தில் அமைந்துள்ள லோ கியாகர் மடாலயத்தின் படம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மடாலயம் நேபாளத்தின் மிகப் பழைமையான மடாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அமைச்சரவை வட்டாரங்களின்படி, இரண்டு ரூபாய் நாணயத்தில் முன்பு அச்சிடப்பட்ட வரைபடமே தக்கவைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஒரு ரூபாய் நாணயத்திலிருந்து புதிய அரசியல் வரைபடத்தை நீக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

