Malaysia Coastal village fire  web
உலகம்

மலேசியாவை புரட்டிப்போட்ட பேரழிவு.. நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள்! கொடூர முகத்தை காட்டிய El-Nino!

மலேசியாவில் வரலாறு காணாத அளவு ஏற்பட்ட காட்டுத்தீயால் 9 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

மலேசியாவின் சபா மாநிலம் சண்டக்கானில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் கடற்கரையோர மரத்தூண்களில் கட்டப்பட்ட சுமார் 1,000 வீடுகள் சாம்பலாகி, 9,000-க்கும் மேற்பட்டோர் வீடிழந்து நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடல் நீர் மட்டம் குறைவு, பலத்த காற்று காரணமாக தீயணைப்பு பணிகள் கடினமடைந்த நிலையில், எல் நினோ, வெப்ப அலை காரணமான வறட்சி இந்த பேரழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

மலேசியாவின் சபா (Sabah) மாநிலத்தில் உள்ள சண்டக்கான் (Sandakan) மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், கடல் நீர் மட்டம் குறைவாக இருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதோடு புதிதாக பல இடங்களுக்கும் தீ பரவிய நிலையில், பல ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மீட்புப்படையினர் வெளியிட்ட தகவலின்படி, கடற்கரையோரம் மரத்தூண்களில் கட்டப்பட்டிருந்த சுமார் 1,000 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியதாகவும், 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மைய தகவலில், 2026-ம் ஆண்டு எல் நினோ (El Niño) மற்றும் வெப்ப அலை காரணமாக மலேசியாவில் வெப்பநிலை 38 டிகிரி செல்ஸியஸ் முதல் 40 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்துள்ளது என்றும், இதனால் காடுகள் மிகவும் காய்ந்து போய் எளிதில் தீப்பற்றும் நிலையில் உள்ளதே இந்த பேரழிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Malaysia Coastal village fire

2026-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 12,938 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன என்றும், இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றும் மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீ காரணமாக மலேசியாவின் பல பகுதிகளில் காற்றுத் தரம் மோசமடைந்துள்ளதால் மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என மலேசிய அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.