போரில் சேதம்.. அமெரிக்காவை நம்பியதன் விளைவு.. நஷ்ட ஈடு கேட்கும் அரபு அமீரகம்!
மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற போரில், 11க்கும் மேற்பட்ட நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தைவிடக் வேறு எந்த நாடுகளும் கடுமையான பாதிப்பைச் சந்திக்கவில்லை. இந்த நிலையில், ஈரான் மீதான போரின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் நிதி உத்தரவாதம் கோரியுள்ளது.
மத்திய கிழக்கில் இன்னும் பதற்றம் குறைந்தபாடில்லை. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் லெபனான் - இஸ்ரேல் இடையே தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து அதை நிறுத்துவதற்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை, பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியுற்றால், அது போருக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஈரான் மீதான போரின்போது ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் நிதி உத்தரவாதம் கோரியுள்ளது. மத்திய கிழக்கில் கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற போரில், 11க்கும் மேற்பட்ட நாடுகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தைவிடக் வேறு எந்த நாடுகளும் கடுமையான பாதிப்பைச் சந்திக்கவில்லை. குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் 65% ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கியே குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானிலிருந்து சுமார் 1,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது, ஈரான் 2,200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவியுள்ளது. இதில், 400-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளும், 1,000 ஆளில்லா விமானங்களும் அடக்கம். ஈரானின் இந்தத் தொடர் தாக்குதலால், அங்கு அமெரிக்கத் தளங்கள் மட்டுமின்றி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், பொருளாதார மையங்கள், எண்ணெய்க் கிடங்குகள் என அனைத்துக்கும் குறிவைக்கப்பட்டன. இதனால், அந்த நாடு எண்ணற்ற இழப்பைச் சந்தித்துள்ளது.
இதைச் சரிசெய்யும் பொருட்டு, ஐக்கிய அரபு அமீரகம் நிதி உத்தரவாதம் கோரியுள்ளதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' தெரிவித்துள்ளது. அந்த ஊடகச் செய்தியின்படி, ஐக்கிய அரபு அமீரக மத்திய வங்கியின் தலைவர் காலித் முகமது பலமா, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியுடன் நாணயப் பரிமாற்றத்திற்கு முயன்றார் எனத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, முறையான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை, இருப்பினும் முறைசாரா பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன என அது தெரிவித்துள்ளது.
இதற்கு பிராந்திய நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா தொடங்கிய போரே முக்கியக் காரணம் என்று அரபு அமீரகம் சுட்டிக் காட்டியுள்ளது. அதன் காரணமாகவே, இந்த போருக்காக அமெரிக்கா பணம் செலுத்த வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் விரும்புகிறது என அது தெரிவித்துள்ளது. முன்னதாக, 2025ஆம் ஆண்டு மே மாதம் ரியாத்துக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
சவூதி அரேபியாவிற்கான இந்த 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பில், தாட் (THAAD) அமைப்புகள், பேட்ரியாட் PAC-3 மேம்படுத்தல்கள் மற்றும் ஏவுகணைகள், மேம்பட்ட வான்வழித் தாக்குதல்கள், ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்கள் மற்றும் பெருமளவிலான வெடிமருந்துகள் ஆகியவை அடங்கியிருந்தன. இது, ஈரான் மற்றும் அதன் முகவர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், சவூதி இராணுவத்தை அதிநவீன உபகரணங்களுடன் நவீனமயமாக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால், அடுத்த 9 மாதங்களில், அதாவது தற்போதைய போரில் எதிரொலித்துள்ளது. வளைகுடா நாடுகள் பெரும் விலை கொடுத்து தற்காத்துக் கொண்ட அமெரிக்கப் பாதுகாப்பு அரண் மிக மோசமாகவும் பகிரங்கமாகவும் தோல்வியடைந்துள்ளது. ஒருவேளை, அரபு அமீரகம் வைக்கும் நிதிக் கோரிக்கையை, மற்ற வளைகுடா நாடுகளும் வைத்தால், அது, அமெரிக்காவின் நிதிப் பரவலுக்கு உள்ளாக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள கட்டடங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கான போருக்குப் பிந்தைய செலவுகள் 60 பில்லியன் டாலரைத் தாண்டும். இதில், 50 பில்லியன் டாலர் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகளை மீட்டெடுப்பதற்காக மட்டுமே செலவிடப்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். முன்னதாக, 1991 வளைகுடாப் போரின்போது சவூதி அரேபியா 16.8 பில்லியன் டாலர்களையும், குவைத் 16 பில்லியன் டாலர்களையும் செலுத்தியிருந்தது. அதன்பயனாக, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை வைத்துள்ளது.

