Ethiopia  Reuters
உலகம்

மீண்டும் தொடங்கிய உள்நாட்டுப் போர்.. பொதுமக்களை கொ*ற அரசு.. என்ன நடக்கிறது எத்தியோப்பியாவில் ?

எத்தியோப்பியாவில், அந்நாட்டு அரசுக்கும் போராளிக் குழுக்களுக்கும் இடையே சமீப காலமாக மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இருதரப்பினரிடையேயான தாக்குதல்களில், பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

எத்தியோப்பியா என்பது பல்வேறு இனக்குழுக்களைக் கொண்ட நாடு. அங்கு ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்த அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்கள் உள்ளன. ஆனால், நாட்டின் மத்திய அரசுக்கும் சில பிராந்திய அரசியல் அமைப்புகளுக்கும் இடையே அதிகாரம் தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்னைகள் நீடித்து வருகிறது. குறிப்பாக, டைக்ரே (Tigray) பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வந்த டைக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF) அமைப்புக்கும், பிரதமர் அபி அகமது (Abiy Ahmed) தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கடந்த 2020-ஆம் ஆண்டு மிகப்பெரிய உள்நாட்டுப் போராக வெடித்தது.

Ethiopia

இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். 2022-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. ஆனால், அந்த அமைதி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்தச்சூழலில் தான் தற்போது, டைக்ரே பிராந்தியத்தில் யாருடைய கட்டுப்பாடு இருக்க வேண்டும்? அங்கு மத்திய அரசின் அதிகாரம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? என்ற பிரச்சினைகள் மீண்டும் அந்நாட்டில் தலைதூக்கி இருக்கின்றன.

கடந்த மாதம் டைக்ரே மக்கள் விடுதலை முண்ணனி மத்திய அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஆயுத மோதல்களும் அதிகரித்திருக்கிறது. மேலும், அரசு எதிராக பல்வேறு கிளர்ச்சிப் படைகள் கூட்டணி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் பல்வேறு பிராந்தியங்களில் ஆயுதக் குழுக்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ள எத்தியோப்பிய அரசு ட்ரோன் உள்ளிட்ட வான்வழித் தாக்குதல்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.

Ethiopia

ஆனால், ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களில் பொதுமக்களும் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அம்ஹாரா (Amhara) மற்றும் டைக்ரே (Tigray) ஆகிய இரண்டு பிராந்தியங்களில், கடந்த வியாழக்கிழமை முதல், பொதுமக்கள் கூடும் இடங்களில் அந்நாட்டு அரசு நடத்திய பல்வேறு வான்வெளித் தாக்குதல்களில் 25-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் எவரும் இலக்கு வைக்கப்படவில்லை என்றும், தீவிரவாதக் குழுக்களை மட்டுமே ட்ரோன்கள் மூலம் துல்லியமாக தாக்கி வருவதாக எத்தியோப்பிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மக்கள் வசிக்கும் இடங்களில் ட்ரோன் தாக்குல்கள் நடத்தப்படுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.

இவ்வாறு, அதிகாரப் போட்டி, இன அடையாள அரசியல், ஆயுதக் குழுக்களின் எதிர்ப்பு எனப் பல்வேறு காரணங்களால் மீண்டும் போர்க்களமாக மாறியிருக்கிறது எத்தியோப்பியா.