நெதன்யாகுவுக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்.. இஸ்ரேலில் வெடித்த புதிய அரசியல் புயல்!
இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறாததால், நெதன்யாகுவின் ஆட்சி சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, புதிய அரசை அமைக்க வலியுறுத்துகின்றனர். யூதர்-அரபு மக்களின் ஒற்றுமை அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்குகிறது.
செய்தியாளர் - M.மீரா
இஸ்ரேலில் அக்டோபர் 2026-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அதே நேரம் இந்த இரு கூட்டணிகளையும் சாராத அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜாய்ண்ட் லிஸ்ட் (joint List ) மற்றும் ராம் (Ra'am) கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணிக்கும், கடீ ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 61 நாடாளுமன்ற இடங்கள் (பெரும்பான்மை) கிடைக்கவில்லை. இந்த இழுபறி நிலையால் நாட்டில் புதிய அரசை அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில், நெதன்யாகுவுக்கு எதிரான 'ஸ்டாண்டிங் டுகெதர்' (Standing Together) என்ற அமைப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. தேர்தல் தோல்வி மற்றும் முந்தைய பாதுகாப்பு குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
டெல் அவிவ், ஜெருசலேம், ஹைஃபா, பீர் ஷெவா உள்ளிட்ட ஐந்து நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பங்கேற்றவர்கள், யூதர்களும் அரபு மக்களும் இணைந்த அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய நகரங்களில் மக்கள் தொடர் பேரணிகளை நடத்தி வருகின்றனர். ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின் இல்லத்திற்கு வெளியே திரண்ட மக்கள் அவரை ஆட்சியில் இருந்து வெளியேறும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் கடீ ஐசன்கோட்டின் வீட்டின் முன்பாகவும் மக்கள் திரண்டு, அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கோரி முழக்கமிட்டனர்.
போராட்டத்தின் போது முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டன; நெதன்யாகுவின் தேர்தல் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்ற காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்ததால் இஸ்ரேலில் தற்சமயம் பதற்றமான சூழல் நிலவுகிறது. நாடாளுமன்ற முட்டுக்கட்டையை உடைக்க, அரபு கட்சிகளின் ஆதரவுடன் மாற்று அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகின்றன.
தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் இஸ்ரேலின் எதிர்க்கட்சிகள் உள்ளன. மறுபுறம், நாடாளுமன்றத்தில் குறைவான இடங்களைப் பெற்றுள்ள நெதன்யாகு தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார்.
எனவே, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய ஆட்சியை அமைக்குமா அல்லது அவர்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளால் நெதன்யாகுவுக்கு மீண்டும் அரசியல் வாய்ப்பு கிடைக்குமா என்பதே தற்போது இஸ்ரேல் அரசியலில் எழுந்துள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது.

