\
Pakistan
PakistanReuters

தெறித்து ஓடிய பாகிஸ்தான் ராணுவம்? பயம் காட்டிய பலூச் விடுதலை படை? நடந்தது என்ன? #ViralVideo

பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு பயந்து, பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் தப்பியோடியதாக கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Published on: 
Summary

1948-ல் பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றிய பலூசிஸ்தானில், கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது, பாகிஸ்தான் ராணுவம் வெளியேறியதாகக் கூறும் வீடியோ வைரலாக பரவி, அரசின் கட்டுப்பாட்டில் நிலைமை உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பலூசிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த கலாத் சமஸ்தானம், முதலில் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 1948-ஆம் ஆண்டு, அந்த பகுதியை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றி, அதனை தங்களது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. அந்த நாள் முதல், பலூசிஸ்தானை ஒரு தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று, கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இதனால், அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, பெரும் மோதல்கள், அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். தற்போதைய சூழலில், இந்த மோதல் போக்கு சற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலை தொடர்ந்து, பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெளியேறி இருப்பதாக கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, காசி என்று Username கொண்ட சமூக வலைதள கணக்கில் இருந்து, வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், நீண்ட, வளைந்து செல்லும் பாதையில், முற்றிலும் ஆளில்லாமல் வெறிச்சோடிக்கிடக்கிறது. மேலும், இது பலூசிஸ்தானின் முக்கிய நெடுஞ்சாலை என்றும், இங்கு பாகிஸ்தான் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் என யாருமே இல்லை என்றும், வீடியோவில் பதிவாகியுள்ள நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், கராச்சியிலிருந்து குவெட்டா செல்லும் பிரதான சாலையில் உள்ள முக்கிய பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டுவிட்டதாகவும், இந்த வீடியோவை வெளியிட்ட நபர் தெரிவித்துள்ளார்.

asim munir
asim munirreuters

தொடர்ந்து வீடியோவில் பேசிய அந்த நபர், பாகிஸ்தானின் பொம்மை அரசால், இந்த பகுதியை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பலூசிஸ்தானில் அரசின் அதிகாரம் உள்ளதா அல்லது பலூச் எதிர்ப்புப் போராளிகளின் அதிகாரம் உள்ளதா என்பதை நீங்களே பார்த்துத் தீர்மானிக்க வேண்டும் என்பதற்காக இதைப் பதிவு செய்தேன் எனவும், அந்த நபர் தெரிவித்துள்ளார்.

பலூசிஸ்தானில் நிலைமை அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது என்று, பாகிஸ்தான் அரசு தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், இந்த வீடியோ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. ஆனால், வீடியோவை வெளியிட்ட இந்த நபர், பலூச் விடுதலை படையின் ஆதரவாளர் என்றும், எனவே வீடியோவில் உள்ள தகவல்களை சரிபார்க்க வேண்டும் என்றும், பல்வேறு பாகிஸ்தானிய நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.