8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், கடந்த மாதம் 27-ம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்வந்த கருத்துக்கணிப்புகள் கூறியதைப் போலவே, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது. அதேசமயம், அரபுக் கட்சிக் கூட்டணி 19 இடங்களில் வென்றுள்ளது.
அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் முன்வராத நிலையில், ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்தச்சூழலில் தான், தற்போது ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு அரபுக் கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்துள்ளன. இதையடுத்து, நேற்றைய தினம் காடி ஐசன்காட்-ஐ ஆட்சியமைக்க இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, ஐசன்காட் இஸ்ரேலில் ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவருக்கு 28 நாட்கள் ஆட்சியமைக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவையென்றால், மேலும் 2 வாரங்கள் கூட அவகாசம் நீட்டிக்கப்படக்கூடும். இதன்மூலம், இஸ்ரேலின் ஆட்சி மாற்றம் நடைபெறுவது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.
இதையடுத்து, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், புதிய அரசை அமைக்க வாய்ப்பு பெற்றுள்ள யாஷார் கட்சித் தலைவர் காடி ஐசன்காட்டுக்கும் இடையே கொள்கை ரீதியாகப் பெரிய வேறுபாடு இல்லை. இருவருமே நான் செய்வதை ஆதரிப்பவர்கள் என தெரிவித்துள்ளார்.