donadl trump x page
உலகம்

உலகின் மூத்த தலைவர் பட்டியல்.. 80 வயதைத் தொட்ட ட்ரம்ப்.. முதல் இடத்தில் யார்?

இந்தப் பெருமை, உலகின் மிக வயதான அரசியல் தலைவர்கள் வரிசையில் ட்ரம்புக்கு உச்சத்தைப் பெற்றுத் தந்தாலும், அது அவரை உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தில் வைக்கவில்லை.

Prakash J

80 வயதைத் தொட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலகின் மிக வயதான அரசியல் தலைவர்கள் பட்டியலில் இணைந்திருப்பதுடன் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாகப் பதவியில் உள்ளார். அவர், இன்று (ஜூன் 16) 80ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதன்மூலம், 2022-ஆம் ஆண்டு நவம்பரில் ஜோ பைடன் தனது 80-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய பிறகு, பதவியில் இருக்கும்போதே இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். மேலும், 2025-ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றபோது மிக வயதான நபர் என்ற பெருமையையும் பெற்றார்.

Paul Biya

இந்தப் பெருமை, உலகின் மிக வயதான அரசியல் தலைவர்கள் வரிசையில் ட்ரம்புக்கு உச்சத்தைப் பெற்றுத் தந்தாலும், அது அவரை உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தில் வைக்கவில்லை. காரணம், அவரை வயதில் மூத்தவர்கள், உலகத் தலைவர்களாக உள்ளனர். 186 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் தலைவர்களைப் பற்றிய பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Center) சமீபத்திய பகுப்பாய்வின்படி, பதவியில் இருக்கும் 16 தேசியத் தலைவர்கள் அமெரிக்க அதிபரைவிட வயதில் மூத்தவர்களாக உள்ளனர். அதன்படி, 93 வயதாகும் கேமரூன் அதிபர் பால் பியா (Cameroon's President Paul Biya), உலகின் மிக வயதான தேசியத் தலைவராக உள்ளார். அவர், இந்தப் பதவியில் 1982 முதல் இருக்கிறார்.

அடுத்து, 90 வயது நிறைந்த சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் (Saudi Arabia's King Salman bin Abdulaziz Al Saud), 2015 முதல் மன்னராகப் பதவி வகித்துவருகிறார். இவர்களைத் தவிர, உலகின் மிக வயதான தலைவர்களில் பலர் ஆப்பிரிக்காவில் குவிந்துள்ளனர் என பியூவின் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. அவர்கள் உகாண்டா, ஈக்வடோரியல் கினியா, மலாவி, ஐவரி கோஸ்ட், ஜிம்பாப்வே மற்றும் காங்கோ குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அது தெரிவிக்கிறது.

இதில் ட்ரம்பைவிட இரண்டு வயது மூத்தவராக உகாண்டாவின் யோவேரி முசெவேனி (Uganda's Yoweri Museveni) உள்ளார். அவர், நான்கு தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து வருகிறார். அதேபோல், ஈக்வடோரியல் கினியாவின் அதிபர் தியோடோரோ ஒபியாங் நுகேமா மபாசோகோவும் (Equatorial Guinea's President Teodoro Obiang Nguema Mbasogo), உலகின் நீண்டகாலம் பதவி வகித்த தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவர், 1979 முதல் ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு வயது 84. எனினும், வயது எதற்கும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஓர் உதாரணமாக திகழ்கிறார்.