ஈரானுக்கு 300 மில்லியன் டாலர் நிதியுதவி கிடையாது; பொய் செய்தி பரப்புகிறார்கள் - ட்ரம்ப் ஆவேசம்!!
அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்கு வழிவகுத்தது. இதனால், சர்வதேச நாடுகள், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகின.
இந்தசூழலில் தான், ஏப்ரல் 8-ம் தேதி பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இதனால் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்தநிலையில் தான், 3 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த போர் முடிவடைந்துள்ளதாகவும் அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அரசுத் தொலைக்காட்சியில் பேசியபோது உறுதிப்படுத்தினார். அதேவேளையில், டிரம்ப் சமூக ஊடகங்களில் எண்ணெய் தடையின்றி பாயட்டும் என்று பதிவிட்டார். இந்த அமைதி ஒப்பந்தம் வரும் ஜூன் 19-ம் தேதி ஜெனிவாவில் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்டப்பட்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகள் மற்றும் பரஸ்பர கோரிக்கைகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்தசூழலில் தான், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரானுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக வெளியாகிவரும் தகவல்களை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து, தனது ட்ரூத் வலைதளப் பதிவில், ஈரான் தன்னிடம் இனி எப்போதும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது எனவும் அதேசமயம், ஈரானுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டாலர் பணம் வழங்குகிறது என்று வெளியாகி வரும் கதைகள் முற்றிலும் பொய்யான செய்திகள் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இதனை எதிர்க்கட்சியான டெமாக்ரட்டுகள் (Dumocrats) திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். அதேபோல, இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் அமெரிக்க நிதியுதவியைப் பெறாது என்று தெரிவித்திருக்கிறார்.

