’இனிதான் ஆரம்பம்..’ தாக்குதலைத் தொடங்கிய ஈரான்.. பதிலடி கொடுத்த இஸ்ரேல்.. தலையிட்ட ட்ரம்ப்!
பேச்சுவார்த்தை ஒருபுறம் இருக்க, மறுபுறம் மத்திய கிழக்கில் தொடர்ந்து தாக்குதலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், போர் நிறுத்தத்தை மீறி பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் முதன்முறையாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தியின் பிரச்னையாகவும் உருமாறியது. காரணம், 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே, போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்துவருகிறது. அதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தை ஒருபுறம் இருக்க, மறுபுறம் மத்திய கிழக்கில் தொடர்ந்து தாக்குதலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், போர் நிறுத்தத்தை மீறி பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஈரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர் தாக்குதல்களின் ஆரம்பம் என ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்த ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டதாகவும், பாதிப்புகள் ஏதுமில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும், ஈரான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார். தவிர, ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஈரானின் டெஹ்ரான், இஸ்ஃபஹான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து டெஹ்ரான் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏமனில் இருந்தும் இஸ்ரேல் மீது ஏவுகணை வீசப்பட்டதால் அங்கு அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது. இத்தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈராக் மற்றும் சிரியா நாடுகள் தங்களின் வான்வழிப் பாதைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளன. இந்த தாக்குதலுக்கு மத்தியில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய ட்ரம்ப், 'இருதரப்பும் தங்கள் தாக்குதல்களை நடத்திவிட்டனர், இனி அமைதி பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் அமைதி முயற்சி பாதிக்கப்படும் என்றும், அடுத்த சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது. மேலும் இந்தியர்கள் ஈரான் வருவதை தவிர்க்கவேண்டும் என்றும் தூதரகம் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலை ஈரான் கடுமையாக தாக்கியுள்ளதால் இஸ்ரேல் கடுமையான பதிலடியை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பெரும் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்புள்ளதால் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானில் முக்கிய நகரங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

