புதின், ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

உக்ரைன் மீது தாக்குதல் | ரஷ்யாவைக் கடுமையாகச் சாடிய ட்ரம்ப்!

ரஷ்யா சமீபத்தில் உக்ரைன் தலைநகா் கீவில் நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனர். இதை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளது.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், போரைத் தீவிரப்படுத்துவதில் ரஷ்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.

ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின்

மறுபுறம், ’போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷ்ய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், கிரீமியாவை தங்கள் பகுதியாக உக்ரைன் ஏற்கவேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும்’ உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளை ரஷ்யா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.

இந்தச் சூழலில், தங்களது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஷ்யாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் அமைதிப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த தாங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையமாட்டோம். தவிர, ’’ரஷ்யாவால் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒருதலைபட்சமாக இணைத்துக் கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்தை அந்த நாட்டுப் பகுதியாக அங்கீகரிக்க முடியாது” எனவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஜெலோன்ஸ்கி, ட்ரம்ப், புதின்

இந்த நிலையில், ரஷ்யா சமீபத்தில் உக்ரைன் தலைநகா் கீவில் நடத்திய தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனர். பல மாதங்களுக்குப் பிறகு கீவ் நகரில் ரஷ்யா நடத்தியுள்ள மிக மோசமான தாக்குதல் இது. இதையடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அமெரிக்கா கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தினாா். இதைத் தொடர்ந்து அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “கீவ் நகரில் ரஷ்யா நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் கண்டனத்துக்குரியது. தேவையே இல்லாத இந்தத் தாக்குதல், அமைதி முயற்சிகள் நடைபெறும் இந்த நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது தவறான செயல். விளாடிமிர் புதின் அவா்களே, இத்தகைய தாக்குதலை உடனடியாக நிறுத்துங்கள். ஒவ்வொரு வாரமும் 5,000 வீரா்கள் உயிரிழந்து வருகின்றனா். அதை நிறுத்தி, உக்ரைனுடன் போா் நிறுத்தம் மேற்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவைத் தவிர, மேலும் பல நாடுகள் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ’கீவ் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் மூலம் ரஷ்யா ஓா் ஆக்கிரமிப்பு சக்தி என்பது நினைவுபடுத்தப்பட்டுள்ளது’ என பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாமா் விமா்சித்துள்ளாா். ’உக்ரைன் மீது தொடா்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே, அமைதியை விரும்புவதாக பொய் கூறுவதை விளாடிமிர் புடின் நிறுத்த வேண்டும்’ என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சாடியுள்ளாா். ’ரஷ்யாவுக்கு போா் நிறுத்தத்தில் துளியும் நாட்டமில்லை என்பதை இந்தத் தாக்குதல் மிகத் தெளிவாக உணா்த்துகிறது’ என டென்மாா்க் பிரதமா் மெட்டே பிரெடெரிக்சன் கூறியுள்ளாா்.