ரஷ்யா - உக்ரைன் போர் | தொடரும் பேச்சுவார்த்தை.. விலகும் அமெரிக்கா?
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், போரைத் தீவிரப்படுத்துவதில் ரஷ்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ”ரஷ்யா-உக்ரைன் போரில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படாவிட்டால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்குள் அதில் இருந்து விலகுவார்” என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”நாங்கள் வாரக்கணக்கில் இந்த முயற்சியைத் தொடரப் போவதில்லை. எனவே இப்போதே மிக விரைவாகத் தீர்மானிக்க வேண்டும். அடுத்த சில வாரங்களில் இது சாத்தியமா, இல்லையா என்பதைப் பற்றி நான் தெரியப்படுத்துவேன். அதிபர் ட்ரம்ப், இதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் நிறைய நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணித்துள்ளார். இது முக்கியமானது. ஆயினும், இதில் அதிக கவனம் செலுத்தப்படாவிட்டாலும், அதே அளவுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய இன்னும் பல முக்கியமான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இதைச் சரிசெய்ய வேண்டும். ஆனால், அதைக் குறுகிய காலத்திற்குள் செய்து முடிக்க முடியுமா என்பதுதான் நம்முடைய சவாலாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.