”முடிவெடுக்கும் முன்பு சேதத்தைப் பார்க்க வாங்க” - ட்ரம்புக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில், போரைத் தீவிரப்படுத்துவதில் ரஷ்யா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடனான போரில் எதிர்த்து போராடுவதற்காக உக்ரைனுக்கு மேலும் உதவி புரியவிருப்பதாக பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன. முன்னதாக, உக்ரைனுக்கு செய்த உதவியை, அமெரிக்க ட்ரம்ப் அரசாங்கம் நிறுத்தியது.
இந்தச் சூழலில், ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட பேரழிவை நன்கு புரிந்துகொள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்கள் நாட்டுக்கு வரவேண்டும் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எந்த விதமான முடிவுகளையோ, பேச்சுவார்த்தைகளையோ முன்னெடுப்பதற்கு முன், ட்ரம்ப் உக்ரைனிற்கு வந்து, ரஷ்யாவின் ஊடுருவல் முயற்சியால் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட வேண்டும். இங்கு வந்து, பொதுமக்களையும், போர் வீரர்களையும், மருத்துவமனைகள், தேவாலயங்கள், குழந்தைகளின் நிலை, இறந்த குழந்தைகள் என அனைத்தையும் ட்ரம்ப் பார்வையிட வேண்டும். அப்படி உக்ரைனுக்கு வந்து ட்ரம்ப் பார்வையிடும்போது, புதினின் உண்மையான முகம் தெரியவரும், புதின் நம்பிக்கைக்கு உரியவர் அல்ல என்றும், யாருடன் ட்ரம்ப் டீல் பேசி வருகிறார் என்பது அவருக்கே புரியவரும். மேலும், தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ட்ரம்ப் வந்த பார்வையிடலாம். நாங்கள் எதையும் தயார் செய்ய மாட்டோம். உள்ளது உள்ளபடியே பார்வையிடலாம். மேலும், போரை நிறுத்த புதின் விரும்பவில்லை. தாங்கள் சுதந்திரமாக இருப்பதை விரும்பாத புதின், முழுவதுமாக தங்களை அழிக்க நினைக்கிறார். அதனால்தான் போர்நிறுத்தம் எந்த பலனையும் அவர் அளிக்கவில்லை” என ஊடகம் ஒன்றிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைன் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ட்ரம்ப், ஏற்கெனவே உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்த ஏராளமான நிதியுதவி வீண் என்றும், பைடன் முட்டாள்தனமான முடிவை எடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். அதோடு, ஜெலன்ஸ்கியையும் விட்டுவைக்கவில்லை. ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பவில்லை என்றும், அவர் சர்வாதிகாரத்தனமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டிய ட்ரம்ப், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபின்பு ஜெலன்ஸ்கி அதிர்ச்சியானார். மேலும், அமெரிக்க செய்துள்ள நிதியுதவிக்கு ஈடாக, உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமையை வழங்குமாறு ட்ரம்ப் ஜெலன்ஸ்கியை நிர்பந்தித்தார். ஆனால் ஜெலன்ஸ்கி அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் தவிர்த்து வருகிறார்.
இவை தொடர்பாக, அமெரிக்காவிற்கு சென்று ட்ரம்பிடம் நேரடியாக பேச்சுவாத்தை நடத்தியபோது, ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு, ஜெலன்ஸ்கி அங்கிருந்து வெளியேறினார். இந்த நிலையில்தான் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, ஜெலன்ஸ்கி, ட்ரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், போரை நிறுத்துவதில் விருப்பம் காட்டாத ரஷ்யா, தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து அதிபர் ட்ரம்ப், ”இது ஒரு கொடுமையான விஷயம். அது பயங்கரமானது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தவறு செய்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சொல்லப்போனால் மொத்த போருமே ஒரு கொடுமையான விஷயம்” எனக் கூறியுள்ளார்.