H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், நாள்தோறும் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, விசா கட்டுப்பாடுகளிலும் புதிய நடைமுறைகளைப் புகுத்தியுள்ளார். அந்த வகையில், தற்போது H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக தற்காலிகமாக அனுமதிக்கப்படும் விசாவே H1B ஆகும். குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். அதாவது, வேலைகளை நிரப்புவது கடினமாகக் கருதப்படும் துறைகளில், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்காக இது 1990இல் உருவாக்கப்பட்டது. இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படுகிறது. இன்னொருபுறம், பெரும்பாலான H1B விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவிற்கு வந்தவுடன், கிரீன் கார்டு வரிசையில் நுழைந்து நீண்டகாலம் தங்குவதற்கு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நடப்பாண்டு Amazon மற்றும் அதன் கிளவுட்-கம்ப்யூட்டிங் பிரிவான AWS, 12,000க்கும் மேற்பட்ட விசாக்களைப் பெற்று முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து டாடா கன்சல்டன்சி, மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளன. என்றாலும், H1B விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெறுகின்றனர். கலிபோர்னியாவில் H1B தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். பவுண்ட்லெஸ் என்ற அமெரிக்க குடியேற்ற ஆலோசனை மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்படி, H1B விசாக்களில் 72.6 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. . இந்தியாவுக்கு அடுத்ததாக சீனர்கள் வெறும் 11.7 சதவிகிதம் பேர் மட்டுமே பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில், ”H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்” என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப், “H1B குடியேற்றமற்ற விசா திட்டம் தற்காலிக தொழிலாளர்களை அமெரிக்காவிற்குள் கொண்டு வந்து கூடுதல், உயர் திறன் கொண்ட செயல்பாடுகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அது அமெரிக்க தொழிலாளர்களை குறைந்த ஊதியம் மற்றும் திறன்கொண்ட தொழிலாளர்களுடன் சேர்ப்பதற்குப் பதிலாக மாற்றுவதற்கு வேண்டுமென்றே சுரண்டப்பட்டுள்ளது. H1B திட்டத்தை துஷ்பிரயேகம் செய்வதும் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். இது, உள்நாட்டுச் சட்ட அமலாக்க நிறுவனங்கள், விசா, பணத்தை மோசடி செய்வதற்கான சதி ஆகும். மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்காவிற்கு வர ஊக்குவிப்பதற்கான பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக HB-சார்ந்த அவுட்சோர்சிங் நிறுவனங்களை அடையாளம் கண்டு விசாரித்துள்ளன" என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று H1B விசா. அமெரிக்கத் தொழிலாளர்களால் செய்ய முடியாத பணிகளைச் செய்யக்கூடிய வெளிநாட்டவர்களைப் பணியமர்த்துவதற்காக மட்டுமே இது பயன்படுத்த வேண்டும். இந்த அறிவிப்பு மூலம் வெளிநாட்டவர்களைப் பணியமர்த்தும் அமெரிக்க நிறுவனங்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும். இதன்மூலம், உண்மையிலேயே திறமையான, அமெரிக்க தொழிலாளர்களால் செய்ய முடியாததைச் செய்யக் கூடியவர்களாக அவர்கள் இருப்பதை உறுதி செய்யும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னர், கடந்த பிப்ரவரி மாத தகவல்படி, நிறுவனத்தின் அளவு உட்பட பல காரணிகளைப் பொறுத்து, H1B விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான செலவு ரூ. 1,67,830 முதல் ரூ.6,13,140 வரை இருந்தது. ஆனால், ட்ரம்ப் தற்போது அறிவித்த 1,00,000 டாலர் என்ற விசா கட்டணம், புதிய H1B விசா வைத்திருப்பவரின் சராசரி ஆண்டு சம்பளத்தைவிட அதிகமாகும். மேலும், அனைத்து H1B விசா வைத்திருப்பவர்களின் சராசரி ஆண்டு சம்பளத்தில் 80%க்கும் அதிகமாகும். H1B விசாவின்கீழ் முதல்முறையாக வேலை தேடும் ஒருவருக்கு, விசா கட்டணம் இப்போது ஆண்டு ஊதியத்தைவிட அதிகமாக உள்ளது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைகள் (USICS) 2025 அறிக்கையின்படி, H1B விசா திட்டத்தின்கீழ் ஆரம்ப வேலைவாய்ப்புக்கான சராசரி ஊதியம் $97000 ஆகும். இந்த எண்ணிக்கை தொடர்ச்சியான H1B விசாக்களுக்கு ($132000) சற்று அதிகமாக இருந்தது. இது சராசரியாக $1,20,000 ஆகும். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக, இந்தியா மிக அதிகளவில் இழப்பைச் சந்திக்க நேரிடும். இது ஒருவேளை, ட்ரம்ப் இந்திய ஏற்றுமதிகளில் விதித்துள்ள 50% கட்டணங்களைவிட அதிகமாக இருக்கலாம். இது இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மற்றொரு அடியாகும்.
இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், இந்தப் புதிய விதி நாளை முதல் (செப்டம்பர் 21) அமலுக்கு வருவதாகவும் அடுத்த 12 மாதங்களுக்கு அமலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H1B விசா விண்ணப்பதாரர்களுக்கு அதிகரித்த கட்டணங்களைத் தவிர, அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 2025 முதல் குடியுரிமை பெறுவதற்கு மிகவும் கடினமான தேர்வையும் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்கீழ், கேள்விகளின் எண்ணிக்கை 128 ஆக அதிகரிக்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் 20இல் குறைந்தது 12 சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும். கூடுதலாக, வருகையாளர் (B1/B2), வேலைவாய்ப்பு (H-1B மற்றும் O-1) மற்றும் மாணவர் (F1) போன்ற குடியேற்றமற்ற விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அவர்கள் வசிக்கும் அல்லது குடிமக்களாக இருக்கும் அந்தந்த நாட்டிலிருந்து மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுத்திட வேண்டி இந்தத் திட்டத்தை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பணிபுரிவதற்காகச் செல்லும் ஊழியர்களே அதிகளவில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் H1B விசா முறையைக் கையாள்வதாகவும், கணினி தொடர்பான துறைகளில் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம், அமெரிக்க நிறுவனங்கள் அதிக அமெரிக்க திறமையாளர்களை வேலைக்கு அமர்த்துவதை உறுதி செய்யும். அதேநேரத்தில், குறைந்த மதிப்புள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும். அந்த வகையில், H1B விசா வைத்திருப்பவர்களில் 70% க்கும் அதிகமானோர் இந்தியர்களாக இருப்பதால், இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
இதற்கிடையே, அமெரிக்காவிற்கு வெளியே தற்போது இருக்கும் இந்த விசாக்களை வைத்திருக்கும் ஊழியர்கள், வரவிருக்கும் காலக்கெடுவிற்கு முன்னதாக, திரும்பி வர வேண்டும் (இன்றைய தேதிக்குள்) என்றும் மைக்ரோசாப்ட் வலியுறுத்தியுள்ளது. அதேநேரத்தில், ஜேபி மோர்கனின் வெளிகுடியேற்ற ஆலோசகர், H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கவும், மேலும் வழிகாட்டுதல் வரும் வரை சர்வதேச பயணத்தைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் ஒரு மின்னஞ்சலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர்களை (ரூ.44 கோடி) முதலீடு செய்பவர்கள் அந்நாட்டில் குடியுரிமை பெற வழி வகுக்கும். இதன்மூலம், வெளிநாட்டினர் 1 மில்லியன் டாலர் (ரூ.8 கோடி) செலுத்துவதன் மூலம் தங்கள் விசாக்களை விரைவாகப் பெற முடியும். அதேநேரத்தில் நிறுவனங்கள் 2 மில்லியன் டாலர் (ரூ.16 கோடி) பங்களிப்பதன் மூலம் தாங்கள் நிதியுதவி செய்யும் வெளிநாட்டு ஊழியருக்கான செயல்முறையை விரைவுபடுத்த முடியும். மேலும், அமெரிக்கா வரிகள், வருமானம் போன்ற எந்த நிபந்தனையுமின்றி அமெரிக்காவில் ஆண்டுக்கு 270 நாட்கள் வரை செலவிட அனுமதிக்கும். ட்ரம்பின் இந்தத் திட்டத்தால், அந்நாட்டின் தேசிய கடன் விரைவாக அடைக்கப்படும் எனவும், அமெரிக்காவில் அதிக வேலைகளை உருவாக்கும் எனவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற்ற அனுமதிக்கும் எனவும் கூறப்படுகிறது.