ட்ரம்ப் - மொஜ்தபா Pt web
உலகம்

”90% முடிந்துவிட்டது..” | ஈரான் உச்ச தலைவர் குறித்து ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்!

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி 90% முடிந்துவிட்டார் என அதிபர் ட்ரம்ப் தெரவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய பிப்ரவரி மாத தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இருதரப்பிலும் மோதல் போக்கு நீடித்த நிலையில், அவ்வப்போது தாக்குதல்களும் நடைபெற்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார். இதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் தாக்குதல் மாறிமாறி நடைபெறுவதால், மத்தியக் கிழக்கில் போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருப்பதுடன் அதன் வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மொஜ்தபா காமேனி

இந்த நிலையில், ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனியின் மகனான மொஜ்தபா காமேனி 90 சதவிகிதம் முடிந்துவிட்டார் என ட்ரம்ப் கூறியுள்ளது ஈரானில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுடன் போர் மீண்டும் வலுக்கும் நிலையில் அவர் கூறியுள்ள இத்தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்களால் ஈரானின் ராணுவ கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் கூறினார். இதில், சிறந்த ராணுவ தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் என அவர் குறிப்பிட்டார்.

trump

மேலும்,ஈரானின் முந்தைய உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய ட்ரம்ப், அவரது மகனும் புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனி தற்போது 90% முடிந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மொஜ்தபா காமேனி போரில் கடுமையாக காயமடைந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. தனது தந்தையின் இறுதிச்சடங்கிலும் மொஜ்தபா காமேனி பங்கேற்வில்லை. அவரது பெயரில் சில அறிக்கைகள் மட்டுமே வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.