’இனி 20% கட்டணம்’.. ஹார்முஸ் ஜலசந்தியில் அதிரடி காட்டும் ட்ரம்ப்.. ஈரானுக்குப் பின்னடைவு!
மத்திய கிழக்கில் தொடர்ந்து போர்ப் பதற்ற்ம் நிலவி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்பதாகவும், அவ்வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளுக்கும் 20% கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய பிப்ரவரி மாத தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வந்தது. மேலும், எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகுகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவர் அறிவித்து அடுத்த சில மணிநேரங்களிலேயே இன்னொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ”மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியைப் பாதுகாக்கும் பொறுப்பை அமெரிக்கா ஏற்கும். அதன் வழியாகச் செல்லும் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும். இந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும்” என அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு, ஈரானுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும், வளைகுடாவில் மீண்டும் தொடங்கிய இராணுவ மோதல்களைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை மீதான பரஸ்பர உரிமைக் கோரிக்கைகளை இருநாடுகளும் முன்வைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

