அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், வர்த்தக ரீதியாக அமெரிக்காவால் பல நாடுகள் ஆதாயம் அடைந்து வருவதாகவும், அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டிற்கு கிடைக்கவில்லை என்றும் கூறி வந்தார். அதன் தொடர்ச்சியாக, பரஸ்பர வரி விதிக்கும் முடிவை எடுத்த அதிபர் ட்ரம்ப், அது தொடர்பான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கு 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ”அனைத்து வெளிநாட்டு பொருட்களுக்கும் குறைந்தபட்ச இறக்குமதி வரியாக 10 சதவீதம் நிர்ணயிக்கப்படுவதாகவும், தங்களிடம் 52 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் இந்தியாவிடம், பரஸ்பர வரியாக 26 சதவீதம் வசூலிக்கப்படும். மோடி எனது சிறந்த நண்பர்தான். ஆனால், இந்தியா எங்களை சரியாக நடத்தவில்லை. அவர்கள் 52% இறக்குமதி வரி விதிக்கிறார்கள். நாம் பல ஆண்டுகளாகவும், பல தசாப்தங்களாகவும் அவர்களுக்கு இறக்குமதி வரி விதிக்கவில்லை” என அறிவித்தார்.
இதன்படி இந்தியப் பொருள்களுக்கு 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10% வரி ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வரும், மீதமுள்ள 16% ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அமெரிக்காவிடம் இருந்து 67 சதவீத இறக்குமதி வரிவிதிக்கும் சீனாவுக்கு 34 சதவீதம் பரஸ்பர வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனுக்கு 20 சதவீதமும், வியட்நாமிற்கு 46 சதவீதமும், தைவானுக்கு 32 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த வரி அறிவிப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக இந்திய வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் இந்தியாவுக்கு சாதகங்கள், பாதகங்கள் இரண்டும் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. வரிவிதிப்பு குறித்து அமெரிக்க அரசு எழுப்பியுள்ள பிரச்னைகளை சரிசெய்யும் நாடுகளுக்கான பதிலடி வரியை குறைக்க ட்ரம்ப் அரசு உறுதி அளித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் நடந்துவருவதாகவும், இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைமுறைக்கு வரும் என்றும் இந்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்வீடன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துளன.
கம்போடியா- 49%
வியட்நாம் - 46%
இலங்கை - மியான்மர் - 44%
வங்கதேசம் - செர்பியா - 37%
தாய்லாந்து - 36%
சீனா - 34%
தைவான் - இந்தோனேசியா - 32%
சுவிட்ஸர்லாந்து - 31%
பாகிஸ்தான் - 29%
தென் கொரியா- 25%
ஜப்பான் - மலேசியா - 24%
ஐரோப்பிய யூனியன் - ஜோர்டான் - 20%
பிலிப்பைன்ஸ் - இஸ்ரேல் - 17%
பிரிட்டன், சிங்கப்பூர், பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துருக்கி, கொலம்பியா, அர்ஜென்டினா, எல் சால்வடார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, சிலி, மொராக்கோ, எகிப்து, பெரு ஆகிய நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.