அமெரிக்காவின் பதில் வரி இன்று நள்ளிரவு முதல் அமல்.. உலகமே எதிர்பார்ப்பு!
அமெரிக்காவால் பல நாடுகள் வர்த்தகரீதியில் பெரும் ஆதாயம் அடைவதாகவும் ஆனால் அதே அளவு பலன் அவர்களால் தங்கள் நாட்டுக்கு கிடைப்பதில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் கருதுகிறார். இதை சரி செய்வதற்காகவே பதில் வரி என்ற திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். அந்த வரி விதிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை ஒன்றரை மணியளவில் வெளியிட உள்ளார். இதை லிபரேஷன் டே அதாவது விடுதலை நாள் என்றே அவர் பெயர் வைத்துள்ளார்.
ட்ரம்ப்பின் வரி அதிகரிப்பு முடிவால் பல நாடுகளும் தங்களுக்கு எந்தளவு பாதிப்பு இருக்கும் என கவலையுடன் காத்துள்ளன. சீனா, மெக்சிகோ போன்ற நாடுகள் பதிலுக்கு பதில் தரப்படும் என எச்சரித்துள்ள நிலையில் இந்தியா போன்ற சில நாடுகள் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ட்ரம்ப்பின் அறிவிப்பு வெளிநாடுகளை மட்டுமல்லாமல் அமெரிக்கர்களையும் கவலை கொள்ளச்செய்துள்ளது.
வெளிநாட்டு பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதால் காய்கறிகளில் இருந்து கார்கள் வரை விலை அதிகரிக்கும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் எனினும் இந்த பாதிப்புகள் தற்காலிகமானவையே இன்றும் நீண்டகால நோக்கில் தன் திட்டம் அமெரிக்காவுக்கு பெரும் பலன் தரும் என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்கா அறிவிக்க உள்ள பதில் வரி நடவடிக்கை இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால் அது எந்த முறையில் அமல்படுத்தப்படும் என்பதில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடுகளை 2 வகைகளாக பிரித்து பாதகமான நாடுகளுக்கு 20% வரியும் சாதகமான நாடுகளுக்கு 10% வரியும் விதிக்கலாமா என்ற ஒரு யோசனை இருப்பதாக தெரிகிறது.
அதே நேரம் ஒவ்வொரு நாடும் விதிக்கும் வரிக்கேற்ப அவற்றுக்கு தனித்த முறையில் வரி விதிப்பது குறித்தும் யோசனை இருக்கிறது. இதில் எதாவது ஒரு வழிமுறைப்படி இன்று நள்ளிரவு அதிபர் ட்ரம்ப் அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகையை மக்களுக்கு பங்கிட்டு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. செலுத்திய வரியில் ஒரு பகுதியை திரும்பித்தருவது அல்லது பங்கு ஈவுத்தொகை என்ற வகையில் வழங்குவது என்ற இரு யோசனைகள் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. அதே நேரம் வெளிநாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால் அமெரிக்காவில் கடுமையாக விலைவாசி உயரும் என்ற அச்சமும் உள்ளது.