"ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்திவுள்ளன.
ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக உருமாறியுள்ளது. போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. தவிர, 10,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் கமேனி, அதற்கு எதிராக ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார். எனினும் அவருக்கு எதிராகப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் போராட்டத்தை உற்று நோக்குவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ’விரைவில் நல்ல முடிவு வரும்’ என எச்சரித்துள்ளார். ஆனால், அதற்கும் ஈரானிய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
இந்த நிலையில், "ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்திவுள்ளன. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரானில் உள்ள தனது குடிமக்கள் அமெரிக்க அரசாங்க உதவி தேவையில்லாத நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேறும் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்’ அதில் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெனிசுலாவைப்போல மிகவும் ரகசியமான முறையில் ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டம் தீட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானில் பயன்படுத்துவதற்கான பல்வேறு வகையான ரகசிய மற்றும் இராணுவ கருவிகள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதில், நீண்டதூர ஏவுகணைத் தாக்குதல்களும், சைபர் செயல்பாடுகளும் ட்ரம்பின் எதிர்பார்ப்பாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், ஈரான் வெளியுறவு அமைச்சர், வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைக்கு தெஹ்ரான் திறந்திருப்பதாகவும், அதேநேரத்தில், போருக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் வணிக உறவுகளைக் கொண்ட நாடுகளின் பொருட்களுக்கும் 25% வரி விதிக்கப்படுவதாக அறிவித்திருந்தார். தவிர, ஈரான் விவகாரம் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என எச்சரித்திருந்தார்.