”விரைவில் ஒரு முடிவு வரும்” - எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்.. பதிலடி கொடுத்த ஈரான்!
”ஈரானின் நிலைமை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது” என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரானதாக உருமாறியுள்ளது. போராட்டக்காரர்கள், கடந்த காலத்தைப் போலல்லாமல், சீர்திருத்தத்தை மட்டும் நாடவில்லை, மாறாக இஸ்லாமிய குடியரசையே நிராகரிக்கின்றனர். அதனால் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு எதிராகப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் கமேனி, அதற்கு எதிராக ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார். தவிர, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதுவரை, 500க்கும் மேற்பட்ட இறப்புகள் மற்றும் 10,600 க்கும் மேற்பட்ட கைதுகள் பதிவாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ”ஈரானின் நிலைமை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது” என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”ஈரானின் நிலைமை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் அங்கு நடக்கும் நிகழ்வுகள் தன் மேஜைக்கு வந்து சேரும். இதனால், அங்கு விரைவில் ஒரு முடிவு வரக்கூடும்” என அவர் எச்சரித்துள்ளார். அதேநேரத்தில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ட்ரம்ப் களத்தில் இறங்கினால், அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவதாக ஈரானின் தலைமை அச்சுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உயர்மட்ட புரட்சிகர காவல்படையின் முன்னாள் தளபதியான கலிபாஃப், “ஈரான் மீது தாக்குதல் நடைபெற்றால், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் (இஸ்ரேல்) மற்றும் அனைத்து அமெரிக்க தளங்கள் மற்றும் கப்பல்களை நாங்கள் தாக்குவோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

