ஈரான் போராட்டம் | 2022இன் தொடர்ச்சி? மஹ்சா அமினி எனும் தீப்பொறி.. சட்டத்தை மீறும் பெண்கள்!
ஈரான் போராட்டத்தை உற்று நோக்குவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ’விரைவில் நல்ல முடிவு வரும்’ என எச்சரித்துள்ளார். ஆனால், அதற்கும் ஈரானிய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக விரைவாக உருமாறியுள்ளது. போராட்டத்தின்போது நடந்த வன்முறையில் இதுவரை 538 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. தவிர, 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் கமேனி, அதற்கு எதிராக ஒருபோதும் தாம் பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்துள்ளார். எனினும் அவருக்கு எதிராகப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் போராட்டத்தை உற்று நோக்குவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ’விரைவில் நல்ல முடிவு வரும்’ என எச்சரித்துள்ளார். ஆனால், அதற்கும் ஈரானிய அரசு பதிலடி கொடுத்துள்ளது. இதற்கிடையே, இந்தப் போராட்டம் 2022இன் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
2022 செப்டம்பர் 13 அன்று, 22 வயதானமஹ்சா அமினி என்ற பெண், ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக ஈரானிய மதக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் கடுமையான தாக்குதலில் அவர் உயிரிழந்தது ஈரானியப் பெண்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. 'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' (Zan, Zendegi,Azadi) என்ற முழக்கத்துடன் போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. பெண்கள் தங்கள் ஹிஜாப்களைக் கழற்றி எரித்தும், தலைமுடியைக் கத்தரித்தும் மதகுருமார்களின் ஆட்சிக்கு நேரடி சவால் விடுத்தனர். இந்தப் போராட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியது; 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2022-இல் தனிமனிதச் சுதந்திரத்திற்காகத் தொடங்கிய அந்த நெருப்பு, தற்போது பொருளாதார நெருக்கடி என்ற வடிவில் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் உணவு, வாடகை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் வீதிக்குக் கொண்டு வந்துள்ளது. அன்று பெண்களால் தூண்டப்பட்ட இந்த உரிமைப் போர், இன்று ஒட்டுமொத்த ஈரானியர்களின் வாழ்வாதாரத்துக்கான போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈரானிய பெண்கள் சிலர், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அலி கமேனியின் புகைப்படங்களில் நெருப்பைப் பற்றவைத்து அதன்மூலம் சிக்ரெட்களில் புகை பிடிக்கின்றன. இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவ்வாறு செய்யப்படுவதற்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
ஆனால், இந்தச் சட்டப் போராட்டங்களை ஈரானிய பெண்கள் 2022க்குப் பிறகு மீறியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும், பல பெண்கள் ஹிஜாப் சட்டங்களை மீறி உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், பல்கலைக்கழகங்களில் ஹிஜாப் இல்லாமல் பெண்கள் தோன்றுவதும், தலைக்கவசம் இல்லாமல் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த ஆண்டு, பிப்ரவரியில், ஒரு பெண் நிர்வாணமாய் போலீஸ் காரில் குதித்ததும், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் நடந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு பெண் தனது உள்ளாடைகளை கழற்றியதும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

