ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், புதின் எக்ஸ் தளம்
உலகம்

ஜெலன்ஸ்கி - ட்ரம்ப் சந்திப்பு.. புதினுக்கு மெலனியா கடிதம்.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேச இருக்கிறார்.

Prakash J

டொனால்டு ட்ரம்ப் - விளாடிமிர் புதின் சந்திப்பு

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், உலக நாடுகள் உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான வரலாற்றுச் சந்திப்பு அலாஸ்காவில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற்றது. உலகளவில் பெருத்த எதிர்பார்ப்பை இந்தச் சந்திப்பு நிகழ்த்தியபோதும் போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் முடிவு தொடர்பாக எதுவும் எட்டப்படவில்லை.

புதின், ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்

எனினும், ட்ரம்பிடம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையினபோது புதின் சில முக்கியமான கோரிக்கையை வைத்ததாகக் கூறப்படுகிறது. அதாவது உக்ரைனின் தொழில் வளம் நிறைந்த பகுதியான டொனெட்ஸ்க்கை உக்ரைன் விட்டுக்கொடுத்தால், போரை நிறுத்த தயார் என்று புதின் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்குப் பதில் புதின் வேறொரு சிறிய பகுதியைத் தருவதாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை குறித்து அதிபர்கள் கருத்து

ஆயினும், இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய ரஷ்ய அதிபர் புதின், "இந்தப் பேச்சுவார்த்தை முன்பே நடந்திருக்க வேண்டும். தாமதமாக நடந்துள்ளது. ஆனாலும், இது சரியான நேரம். அப்போது ஜோ பைடன் இடத்தில் ட்ரம்ப் இருந்திருந்தால், உக்ரைன் போர் ஏற்பட்டு இருக்காது. இப்போது ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

புதின், ட்ரம்ப்

அதன் பின்னர் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,"எங்களது பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. முடிவு எட்டவேண்டுமானால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நான் பேச வேண்டும். அவர் உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டால் அனைத்தும் முடிவுக்கு வரும். இனி எல்லாம் ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது" என்றார். அதேநேரத்தில், அலாஸ்கா சந்திப்பின் மூலம், ட்ரம்ப் - புடின் உறவு அடுத்தகட்டத்தில் உலக சக்திவாய்ந்த அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்பைச் சந்திக்கும் உக்ரைன் அதிபர்

இதைத் தொடர்ந்து உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி, அதிபர் டொனால்டு ட்ரம்பை வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேச இருக்கிறார். இதற்கிடையே, ”உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லையென்றால் அவர் தொடர்ந்து போராடலாம். அது எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கக்கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெலன்ஸ்கி, ட்ரம்ப்

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கே ரூபியோ, “ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வர வேண்டுமானால், இருநாடுகளும் தாக்குதலைக் கைவிட வேண்டும். ஆனால், ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. தற்போதைய மற்றும் எதிர்காலங்களில் மோதல் ஏற்படாமல், நிரந்தரமான அமைதியை விரும்புகிறோம். தற்காலிக நிறுத்தத்தை விரும்பவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அமெரிக்க முதல் பெண்மணியும், ட்ரம்பின் மனைவியுமான மெலனியா ட்ரம்ப், புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியுள்ளார்.