தொடரும் போர் | ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்?
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா ஆகிய இருநாட்டு அதிபர்களும் தனியாகச் சந்தித்துப் பேசலாம் எனத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்த உக்ரைன் தரப்பு, அடுத்த மாத இறுதியில் இருநாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ரஸ்டம் உமேராவ், இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை ரஷ்யா கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதேபோல், தங்களிடம் உள்ள மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்கவும், உயிரிழந்த 3 ஆயிரம் உக்ரைன் வீரர்களின் உடல்களை ஒப்படைக்கவும் ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது. இருநாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாடு குறித்து கருத்து கூறிய ரஷ்ய குழுவின் தலைவர் Vladimir Medinsky, உச்சிமாநாடு என்பது ஒப்பந்தம் கையெழுத்திற்காகவே நடக்க வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைக்கு நடத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.