Court deals a blow to Trump Reuters
உலகம்

டிரம்ப்புக்கு செக் வைத்த நீதிமன்றம்: இனி தேர்தலில் வெல்வதில் சிக்கல்! நடந்தது என்ன?

அமெரிக்க நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதில் டிரம்ப் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Praveen Joshva L

அமெரிக்க நீதிமன்றம் டிரம்ப் அரசின் அரசாங்க நிதி பயன்படுத்தி கட்சியின் கொள்கை விளம்பரங்களை வெளியிடுவது சட்டவிரோதம் என தீர்ப்பளித்தது. இதனால் டிரம்ப் நிர்வாகம் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இந்த தீர்ப்பு இடைத்தேர்தலிலும், 2028 அதிபர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க காங்கிரஸ் மற்றும் மாநில அரசுகளுக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ளது. அதாவது அன்றைய தினம் அமெரிக்கப் நாடாளுமன்றத்தின் கீழ் அவையான பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 தொகுதிகளுக்கும், மேலவையான செனட் சபையின் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும், அமெரிக்காவின் 39 மாகாணங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர் பதவிகளுக்கும், பல்வேறு மாகாணங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தின் பாதியில் நடைபெறும் இந்த இடைத்தேர்தல், அவரது நிர்வாகத்திற்கு மக்கள் அளிக்கும் மதிப்பீடாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால் மட்டுமே அவரது திட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நிலை உள்ளது.

மேலும் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பிடித்தால், அதிபரின் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகளை முடக்கும் அதிகாரம் அவர்களுக்குக் கிடைக்கும். இதனால் டிரம்ப்புக்கு பெரும் சிக்கல் உருவாகும். மேலும் இந்தத் தேர்தல் முடிவுகள் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக இந்தத் தேர்தலில் வெற்றிபெற டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் அரசின் செலவில் கோடிக்கணக்கான டாலர் மதிப்பீட்டில் தனது அரசின் கொள்கை விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். அரசின் செலவில் ஒரு தனி கட்சிக்கும், அதன் தலைவருக்கும் விளம்பரம் செய்யப்படுவதை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Jennifer Rochon

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ஜெனிஃபர் ரோஷன் (Jennifer L. Rochon), "மக்களின் வரி பணத்தில் கிடைக்கும் அரசாங்க நிதியை பயன்படுத்தி கட்சியின் கொள்கை விளம்பரங்கள் வௌியிடுவது சட்டவிரோதம்" என கூறி டிரம்ப் அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதோடு இந்த தீர்ப்பு வெளிவந்த அடுத்த சில மணி நேரங்களில் தொலைக்காட்சி, ஊடகங்களில் வெளியாகவிருந்த விளம்பரங்கள் உள்பட மீதமுள்ள அனைத்து விளம்பரங்களையும் ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.