அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு இராணுவ நடவடிக்கையைச் சட்டவிரோதமானது என்று சீனா பலமுறை விமர்சித்து வந்தபோதிலும், போரில் அது யாருக்கும் ஆதரவு காட்டவில்லை. அதேநேரத்தில், இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானின் அழைப்பின் பேரில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் ட்ரம்பே ஒப்புக் கொண்டிருந்தார்.
நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அந்த ஜலசந்தி வழியாக தன் நாட்டுக் கப்பலையும் வெளியேற்றியுள்ளது. இது அமெரிக்காவுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக சீனா 4 அம்சத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
அதன்படி, அமைதியான சகவாழ்வுக் கொள்கையை நிலைநிறுத்த வேண்டும்; தேசிய இறையாண்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் கொள்கைகளை ஏற்கவேண்டும்; சர்வதேச விதி அடிப்படையிலான ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், ”சர்வதேச சட்டத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டும். 'நமக்குச் சாதகமாக இருக்கும்போது அதைப் பயன்படுத்துவது, சாதகமாக இல்லாதபோது நிராகரிப்பது' என்ற நிலை இருக்கக்கூடாது. மேலும், உலகம் காட்டுமிராண்டித்தனமான சட்டத்திற்குத் திரும்புவதை நாம் அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். இது, அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டிருக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அதாவது, ஈரானின் ஹார்முஸ் பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டிருப்பதை வைத்து, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருப்பதை வைத்தே இந்தப் பதிவு வெளியாகி இருக்கிறது. இன்னொரு புறம், ஈரானுடன் சீனா நெருங்கிய உறவு கொண்டிருக்கிறது. அதைக் காப்பாற்றும் நோக்கிலும் சீனா இதைச் செய்திருக்கலாம் என்ற கூற்றும் நிலவுகிறது.
ஏற்கெனவே அமெரிக்கா - சீனா இடையே வரி விவகாரம் தொடர்பாக மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டு இராணுவ நடவடிக்கையைச் சட்டவிரோதமானது என்று சீனா பலமுறை விமர்சித்து வந்தபோதிலும், போரில் அது யாருக்கும் ஆதரவு காட்டவில்லை. அதேநேரத்தில், இரண்டு வார போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானின் அழைப்பின் பேரில் சீனாவின் தலையீடு இருந்ததாக அதிபர் ட்ரம்பே ஒப்புக் கொண்டிருந்தார். எனினும், ஈரானுக்கு சீனா ரகசியமாக ஆயுதங்களை வழங்குவது கண்டறியப்பட்டால், அந்நாட்டின் மீது 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். அடுத்த மாதம் ஜின்பிங்கும், ட்ரம்பும் சந்திக்கவிருக்கும் நிலையில் சீனாவின் 4 அம்சத் திட்டம் வெளியாகி இருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.