ஈரான் போர் நிறுத்தம் | கடைசி நேரத்தில் அழுத்தம் கொடுத்த சீனா.. ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!
ஈரான் மீது உச்சகட்டத் தாக்குதலுக்கு ட்ரம்ப் தயாராகி வந்த நிலையில் ஈரான் நிர்வாகத்துடன் தாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக இரு சீன உயரதிகாரிகள் ஏ.பி.செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தத்திற்கு சீனா பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர், தற்போது பாகிஸ்தானின் மத்தியஸ்த்திற்குப் பிறகு 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக 10 அம்ச கோரிக்கைகளை ஈரான் அமெரிக்காவிடம் வைத்துள்ளது. இது, பரிசீலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இவை பரிசீலிக்கப்படும் பட்சத்தில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்தத்திற்கு சீனா பின்னணியில் இருந்து செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது உச்சகட்டத் தாக்குதலுக்கு ட்ரம்ப் தயாராகி வந்த நிலையில் ஈரான் நிர்வாகத்துடன் தாங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக இரு சீன உயரதிகாரிகள் ஏ.பி.செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். ஹார்முஸ் நீரிணையை படைபலம் கொண்டு வலுக்கட்டாயமாக திறக்கவழி செய்யும் ஐநா தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தத்திற்கு இணங்குமாறு ஈரானுக்கு சீனா அழுத்தம் கொடுத்ததாக தானும் அறிந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும் கூறியுள்ளார். போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் மூலமாகவும் சீனா சில காய்நகர்த்தல்களை மேற்கொண்டதாக தெரிகிறது. ஈரானும் சீனாவும் நெடுங்காலமாகவே ஆழமான நட்புகொண்ட நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது, சீனா தனக்கு தேவையான கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதியை ஈரானில் இருந்துதான் வாங்குகிறது. மேலும் ஈரானில் பல்வேறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் சீனா பெரிய அளவில் உதவியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளை ஈரான் சமாளிக்க சீனா மிகப்பெரிய அளவில் உதவி வந்தது.

