சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள லாய்சூ கடற்கரைக்கு அருகே, மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தை சீன புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தங்கத்தின் தேவை விலையையும் பொருட்படுத்தாது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றிய தேடலும் உலகமெங்கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நமது அண்டை நாடான சீனாவும் மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடித்துள்ளது. சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள லாய்சூ கடற்கரைக்கு அருகே, மிகப்பெரிய தங்கச் சுரங்கத்தை சீன புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒரு கண்டுபிடிப்பால், லாய்சூ நகரத்தின் மொத்த தங்க இருப்பு 3,900 டன்னாக உயர்ந்துள்ளது. அதாவது, சீனாவின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 26% இந்த ஒரே நகரத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், 1 டன் தாதுவில் சராசரியாக 4.2 கிராம் தங்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடலுக்கடியில் உள்ள அந்த தங்கப் படிமத்தின் உண்மையான அளவை அதிகாரிகள் வெளியிடவில்லை. இது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல தங்கப் படிமங்களில் ஒன்றாகும். இது சீனாவின் தங்க இருப்புக்கள் முன்பு மதிப்பிடப்பட்டதை விட கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று உணர்த்துகிறது. அதேநேரத்தில், இந்தத் தங்கத்தை எடுக்க சீனா சுமார் 11,000 கோடி ரூபாய் (1.4 பில்லியன் டாலர்) முதலீடு செய்து அதிநவீன சுரங்க வசதியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆலை பயன்பாட்டிற்கு வரும்போது, நாளொன்றுக்கு 12,000 டன் தாதுக்கள் சுத்திகரிக்கப்பட்டு, ஆண்டுக்கு 15 டன் தங்கம் சீனாவிற்கு லாபமாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த மாதம், நாட்டின் வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கில், குறைந்த தர தங்கப் படிமத்தைக் கண்டுபிடித்ததாக அந்த நாடு அறிவித்தது. இதன் உறுதிப்படுத்தப்பட்ட இருப்பு 1,444.49 டன்கள் (50.95 மில்லியன் அவுன்ஸ்) ஆகும். 1949இல் மக்களாட்சி நிறுவப்பட்டதற்குப் பிறகு, கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ஒற்றைத் தங்கப் படிமமாக இது அறியப்பட்டது. மேலும் அதே மாதத்தில், சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியின் மேற்கு எல்லைக்கு அருகில் உள்ள குன்லுன் மலைகளில் ஒரு தங்கப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மதிப்பிடப்பட்ட இருப்பு 1,000 டன்களுக்கும் அதிகமாகும் (35.27 மில்லியன் அவுன்ஸ்).
முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஷான்டாங் மாகாணம், சீனாவின் தங்க இருப்புகளில் சுமார் கால் பகுதியை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இதில், லைஜோ அமைந்துள்ள ஜியாவோடாங் தீபகற்பத்தில் உள்ள 3,500 டன்களுக்கும் அதிகமான (123.46 மில்லியன் அவுன்ஸ்) தங்கமும் அடங்கும். இது உலகின் மூன்றாவது பெரிய தங்கச் சுரங்கப் பகுதியாகும்.
சீனா தங்கத் தாது உற்பத்தியில் உலகின் மிகப்பெரிய நாடாக உள்ளது. சீனா தங்கச் சங்கத்தின்படி, கடந்த ஆண்டு இதன் உற்பத்தி 377 டன்களாக (13.3 மில்லியன் அவுன்ஸ்) இருந்தது. தங்க உற்பத்தியில் இந்த நாடு முதலிடத்தில் இருந்தாலும், நிரூபிக்கப்பட்ட தங்க இருப்புகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பின்தங்கியுள்ளது. சீனா கனிம ஆராய்ச்சியில் தனது முயற்சிகளை அதிகரித்து வருகிறது, சீன புவியியலாளர்கள் செயற்கை நுண்ணறிவு, உயர் சக்தி கொண்ட தரை-ஊடுருவக்கூடிய ரேடார் மற்றும் கனிம ஆய்வு செயற்கைக்கோள்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். 2021-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாயை இத்தகைய ஆய்வுகளுக்காக சீனா செலவிட்டுள்ளது. அதன் பலன்தான் தற்போது கடலுக்கடியில் உள்ள தங்கச் சுரங்கமும் வெளிப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம் அம்ராப்பூரில் வளமான தங்கம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. அங்கு தங்கம் வணிகரீதியாக சாத்தியமான அளவைவிட (4–7×) அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதாவது, 1 டன் மண் பாறையில் 12–14 கிராம் இருப்பதாகத் தெரியவந்தது.