ஒரே மாநிலத்தில் இத்தனை கனிமங்களா? தங்கம் மட்டும் இவ்வளவா? மகிழ்ச்சியில் மத்திய அரசு.. ஆனால்?
இந்தியாவின் மிகவும் வளமான, பயன்படுத்தப்படாத கனிம வளங்களில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. அங்கே, உயர்தர தங்கம் மற்றும் லித்தியத்தின் தடயங்கள் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கனிம இருப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தங்கத்தின் தேவை விலையையும் பொருட்படுத்தாது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றிய தேடலும் உலகமெங்கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் அதன் தேடல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தங்கச் சுரங்கங்கள் காணப்படுகின்றன. தவிர, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம் அம்ராப்பூரில் வளமான தங்கம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அங்கு தங்கம் வணிகரீதியாக சாத்தியமான அளவைவிட (4–7×) அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, 1 டன் மண் பாறையில் 12–14 கிராம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தங்கத்தின் தரங்கள், ஆழமாக துளையிடப்பட்ட பிறகு 8–10 கிராம்/டன் என வைத்துக்கொண்டால், வருடத்திற்கு 100,000 டன் சுரங்கம் ஒன்று தினமும் 25–30 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் எனக் கணக்கிடப்படும் வேளையில், அச்சுரங்கம் இன்றைய ரூ.1,30,000/10 கிராம் விலையில் ரூ.18–22 கோடி மதிப்புடையது.
கடந்த மாதம், மாநில சுரங்கம் மற்றும் புவியியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், 65 தொகுதிகளில் 6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான உளவு ஆய்வின் ஒரு பகுதியாகும். இருப்பினும், பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் ஆழமாக இருப்பதால் அவற்றை எடுக்க முடியாது எனவும் சொல்லப்படுகிறது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிலை-I வன அனுமதி இல்லாமல் சில மீட்டருக்கு மேல் ஆழமாக தோண்ட அனுமதிக்கப்படாது. மேலும் அதற்கு மேல் அனுமதி வழங்கப்படுவதில்லை.
இன்னொரு புறம், அதே கர்நாடகாவின் அமரேஷ்வர் பகுதியில் லித்தியமும், ராய்ச்சூர் பகுதியில் லித்தியம் தாங்கும் பெக்மாடைட்டுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் அதுகுறித்து இன்னும் அளவிடப்படவில்லை. இவை தவிர, மாநிலத்தின் 65 தொகுதிகளில் தாமிரம், கோபால்ட், REE,பாக்சைட், குரோமியம் ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முக்கியமான கனிமங்களை இந்தியா முழுதும் தேடிக் கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு கர்நாடகாவின் இந்தக் கண்டுபிடிப்பு மகிழ்ச்சியைத் தந்தாலும் இவையனைத்தும் பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களின்கீழ் வருவதால் ஏமாற்றத்தையே தந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மீளமுடியாத சேதத்தை காரணம் காட்டி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர பழங்குடிய வசிப்பிடங்கள், வன உயிரினங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதையும் மீறி, கர்நாடகாவின் ’கனிம ஜாக்பாட்’, வெற்றி பெறுமானால் அது நடைமுறைக்கு வர இன்னும் 5-8 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

