பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது அந்நாட்டுக்கு உதவும் விதமாக சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்களை அனுப்பியதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த தகவலை சீனா மறுத்துள்ளது.
இதுதொடர்பாக சீன வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாகிஸ்தானுக்கு ஒய்-20 என்ற சரக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் தவறானது. அது வதந்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம். ராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்கி பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைக்கும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அதுபோன்ற செய்திகளைச் சரிபார்த்து மிகுந்த கவனமுடன் பிரசுரிக்க வேண்டும் அந்நாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.