ஆபரேஷன் சிந்தூர் | போலிச் செய்தி வெளியிட்ட சீனா.. உண்மையைக் கண்டறிய சொன்ன இந்தியா!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று (மே 7) அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். 'ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற குழுக்களுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை நீடித்த இந்தத் தாக்குதலில், அதாவது 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை இந்திய ராணுவமும், விமானப் படையும் ஏவின. இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ”ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக தவறான தகவல்களைத் தர வேண்டாம்” என சீன நாட்டு ஊடகத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்திய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக பழைய படங்களைப் பயன்படுத்தி சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு சீனாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த பதிவில், “அன்புள்ள குளோபல் டைம்ஸ், இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு உங்கள் உண்மைகளைச் சரிபார்த்து, உங்கள் ஆதாரங்களை குறுக்கு விசாரணை செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான பல அமைப்புகள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபட்டு, ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருகின்றன. ஊடகங்கள் ஆதாரங்களைச் சரிபார்க்காமல் இதுபோன்ற தகவல்களைப் பகிரும்போது, அது பொறுப்பு மற்றும் பத்திரிகை நெறிமுறைகளில் கடுமையான குறைபாட்டை பிரதிபலிக்கிறது” எனத் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அதுகுறித்த உண்மைச் சரிபார்ப்பையும் வெளிகொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024 செப்டம்பரில் ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை (IAF) MiG-29 போர் விமானம் சம்பந்தப்பட்ட முந்தைய சம்பவத்திலிருந்து வந்துள்ளது என்றும், மற்றொன்று 2021இல் பஞ்சாபிலிருந்து வந்த IAF MiG-21 போர் விமானம் எனவும் அது தெரிவித்துள்ளது.