செய்தியாளர் - ராஜ்குமார்.ர
ஆஸ்திரியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ320 ரக விமானம், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்குப் 51 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளது. ருமேனியா எல்லைப் பகுதியை நெருங்கியபோது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்காக பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவுக்குத் விமானத்தை பாதியிலேயே திருப்பிவிட்டனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்துக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல்கேரிய விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, சோஃபியாவில் உள்ள வாசில் லெவ்ஸ்கி விமான நிலையத்தில் அந்தப் பயணிகள் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் வெளியேற்றப்பட்டு, விமானம் முழுவதும் பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டது.
விமானம், பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவிதமான ஆபத்தும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து விமானம் மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்து வியன்னாவைச் சென்றடைந்தது.
ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் மாதம் துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானி ஒருவர் விமானியின் மீது தாக்குதல் நடத்தி விமானத்தைக் கைப்பற்ற முயன்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலால் விமானத்தை கடத்தும் முயற்சி தோல்வியடைந்தது. அந்தச் சம்பவத்தில் விமானப் பணியாளர்களும் பயணிகளும் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மற்றொரு விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.