Flydubai சம்பவம் | அமெரிக்கா, இஸ்ரேல் விமானங்களுக்குக் குறி.. அடுத்த திட்டம் போடும் அல்கொய்தா?
துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியைத் தொடர்ந்து, தீவிரவாத அமைப்பான அல்கொய்தா உலகளவில் புதிய தாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ’போர் இன்னும் முடியவில்லை’ என வெளியிடப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் விமானங்கள் குறிவைக்கப்படலாம் என அது தெரிவித்துள்ளது.
துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி கத்தியால் குத்தி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.
இது, உலகம் முழுவதும் பேசுபொருளாகி வரும் நிலையில், இதன் பின்னணியில் இருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து துபாய், சவூதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்ட புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஒசாமா பின் லேடன் மற்றும் அய்மன் அல்-ஜவாஹிரி உள்ளிட்ட பல அல்-கொய்தா தலைவர்களின் பதிவுகள் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமியின் சமூக ஊடகக் கணக்குகளில் இருந்ததால் அவை குறித்தும் விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமியத் தீவிரவாதச் சிந்தனைக்கு ஆட்பட்டதாகவும், பயணிகளுடன் விமானத்தை மோதச் செய்யும் நோக்கம் கொண்டிருந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அரபு மொழி பத்திரிகையில் வெளியான கட்டுரை, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்-கொய்தா ஆதரவாளர்களால் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட 'அல்-பயான்' என்ற வார இதழின் சமீபத்திய பதிப்பில்தான் இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
’போர் இன்னும் முடியவில்லை’ என வெளியிடப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில், ‘சியோனிஸ்டுகள், அமெரிக்கர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராகப் போராடும் மற்ற அனைத்து காஃபிர்களையும் ஏற்றிச் செல்லும் விமானங்கள் இன்னும் வானில் வட்டமிடுகின்றன, செப்டம்பர் 11 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்ததுபோல அவையும் குறிவைக்கப்படலாம்’ என்று அல்கொய்தா தூண்டிவிட்டுள்ளது. நியூயார்க் உலக வர்த்தக மையத் தாக்குதலை நினைவுபடுத்தும் புகைப்படங்கள் மற்றும் ஃப்ளைதுபாய் விமானச் சம்பவக் காட்சிகளுடன் இந்த எச்சரிக்கை செய்தி பரப்பப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விமர்சித்திருந்த 'தி நியூயார்க் போஸ்ட்', ‘அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முன்பைவிட அதிகமான எதிரிகள் உள்ளனர். தீய அமெரிக்கப் பேரரசு இறுதியில் முடிவுக்கு வரும்’ எனச் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அது பின்னர் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கட்டுரை உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

