பில்லியனர்கள் எக்ஸ் தளம்
உலகம்

டெஸ்லா விற்பனை 70% சரிவு; ட்ரம்ப் பதவியேற்புக்குப் பிறகு 200 பில்லியன் டாலரை இழந்த 5 கோடீஸ்வரர்கள்!

உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கும் எலான் மஸ்க் இந்த 7 வாரத்தில் தனது சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார்.

Prakash J

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது பதவியேற்புக்காக பில்லியனர்கள் பலரும் தங்களது டாலர்களைக் கொட்டினர். அதிபர் தேர்தலுக்கும் ட்ரம்பின் பதவியேற்புக்கும் இடைப்பட்ட காலம் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்றே கூறலாம்.

ஆனால், தற்போது அதில் சில பில்லியனர்களுக்கு தலைகீழ் மாற்றத்தைத் தந்துள்ளது. ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றியபோது அவருடன் இருந்த 5 பெரும் பணக்காரர்கள், தற்போது தங்களுடைய சொத்து மதிப்பில் பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளனர். ட்ரம்ப் வந்துவிட்டார் இனி அமெரிக்கா பொருளாதாரம் புதிய வேகத்தில் உயரும் என நம்பிக்கை அனைவரிடத்திலும் இருந்தது. இதன் காரணமாக அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து முதலீட்டை வெளியேற்றினர். ஆனால் கடந்த 7 வாரத்தில் அமெரிக்கப் பணக்காரர்களின் நிலை மொத்தமும் மாறியுள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உலகிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கும் எலான் மஸ்க் இந்த 7 வாரத்தில் தனது சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார். எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பில் பெரும் பகுதியாக இருப்பது டெஸ்லா பங்கு மதிப்புதான். ஆனால் கடந்த 7 வாரத்தில் அவரது சொத்து மதிப்பு 148 பில்லியன் டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது.

ஐரோப்பிய சந்தையில் ஜெர்மனியில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லா விற்பனை 70% சரிந்துள்ளது. சீனாவில் பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 49% குறைந்து. இதுவும் அவருடைய சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

ட்ரம்பின் பதவியேற்புக்கு 1 மில்லியன் டாலர் தொகையை அள்ளிக்கொடுத்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் சொத்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜனவரி 17ஆம் தேதி முதல் ஜெஃப் பெசோஸ் உருவாக்கிய அமேசான் நிறுவனத்தின் பங்கு டாலர் 29 பில்லியன் குறைந்துள்ளது.

கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின்

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்த கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின், பதவியேற்புக்குப் பிறகு அவருடன் நெருக்கம் காட்டினார். அவருடைய Alphabet Inc பங்கு மதிப்பு இந்த ஆண்டு மட்டும் டாலர் 22 பில்லியன் சரிந்துள்ளது.

ட்ரம்ப்

ஃபேஸ்புக்-ன் மார்க் ஜூக்கர்பெர்க்

அடுத்து, ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஃபேஸ்புக்கை உருவாக்கிய மார்க் ஜூக்கர்பெர்க்கின் பங்குகளும் ஜனவரியில் உயர்ந்திருந்தபோதும், தற்போது டாலர் 5 பில்லியன் சரிவைச் சந்தித்துள்ளது.

பெர்னார்ட் அர்னால்ட்

பிரெஞ்சு ஆடம்பர பொருட்கள் துறையில் முக்கிய நபரும் ட்ரம்பின் நெருங்கிய நண்பருமான பெர்னார்ட் அர்னால்ட்க்கும் இதே பிரச்னைதான். அவரும் டாலர் 5 பில்லியனை இழந்துள்ளார்.

ட்ரம்ப் முதல் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகள் பெரும்பாலும் சீனாவுக்கு எதிராக அமைந்திருந்த வேளையில், 2வது ஆட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அமெரிக்காவுக்கே எதிராக அமைந்துள்ளது பெரும் பிரச்சனையாக உள்ளது.

இதனால்தான் இந்த 5 பில்லியனர்களும் இழப்பைச் சந்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்க ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கங்களும், அதிபரின் அதிகப்படியான வரி விதிப்பு முறைகளும், அதிரடி அறிவிப்புகளுமே பங்குச் சந்தைகளை உலுக்கியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.