michael jackson x page
உலகம்

மைக்கேல் ஜாக்சன் என்னும் மாயவன்.. பிறந்த தின சிறப்புக் கட்டுரை!

அமெரிக்கப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாள் குறித்த செய்தித் தொகுப்பை இந்தக் கட்டுரை வழங்குகிறது.

திலகவதி

மைக்கேல் ஜாக்சன், உலகப் புகழ் பெற்ற பாப் இசை மன்னன், தனது பிறந்த நாளில் நினைவுகூரப்படுகிறார். அவரது இசை, நடனம், மற்றும் மேடை நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ரசிகர்களை மயக்கின. 'Thriller' ஆல்பம் வரலாற்றில் அதிகம் விற்கப்பட்டதுடன், 'Moonwalk' போன்ற அசைவுகள் மாயாஜாலமாக அமைந்தன. அவரது சமூக உணர்வு பாடல்கள் பாரபட்சத்திற்கு எதிராக குரல் கொடுத்தன.

ஒருவர் மைக் பிடித்து பாடுகிறார்... மேடையில் ஆடுகிறார்... உணர்ச்சிப் பிழம்பாக அவரது பாடல் வரிகள் நம் மீது பட்டுத் தெறிக்கிறது. அவரைக் காணக் கூடியிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவர் பாடலில், அசைவுகளில், ஊறி திளைக்கிறார்கள், மயக்கம் கொள்கிறார்கள், உடலிலிருந்து ஆன்மாவே வெளியே வந்து இறைஞ்சுவது போல உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடிக்கிறார்கள். தவமாய்த் தவமிருந்து தன் கடவுளைக் கண்ட பக்தர்கள் போல….

ஒவ்வொரு தலைமுறைக்கும் அந்தந்த தலைமுறைக்கான ஹீரோக்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு நூற்றாண்டின் நாயகனாக உலகம் முழுவதும், காலம்கடந்தும் நிலைத்து நிற்கும் புகழ் மிகவும் சிலருக்கே வாய்ப்பதுண்டு. அந்தச் சிறப்பிடம் பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். Pop king என்று உலகம் முழுதும் ஆராதிக்கப்பட்ட முடிசூடா மன்னன். அவரின் பிறந்தநாள் இன்று...

michael jackson

1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்த மைக்கேல் ஜோசப் ஜாக்சன், ஒரு பிறவி கலைஞன் என்பது, அவர் ஜாக்சன் 5 என்ற குழுவில் சிறுவனாக மேடையில் கால் வைத்த அந்தக் கணத்தில் இருந்தே தெரிந்து விட்டது. அவரது குரல் குழந்தைத்தனமும் ஆன்மாவும் கலந்த ஒன்றாக இருந்தது. அவரது நடன ஆற்றல் தீவிரமும், புதுமையும் கொண்டதாக, இதுவரை எவரும் கண்டிராததாக இருந்ததும்தான் மொத்த இசை ரசிகர்களையும் ஆட்கொண்டிருந்தது. இசை உலகையே புரட்டிப் போட்ட தனித்துவமான கலைஞராகத் திகழ்ந்தவர் MJ என்றால் அது மிகையல்ல. அமெரிக்கா முதல் ஆசியா வரை, ஆப்ரிக்கா முதல் ஐரோப்பா வரை, அவரது செல்வாக்கு எல்லையற்றது. ஒரே தாளம், ஒரே இதயத் துடிப்பு, ஒரே நடனம் – உலகையே ஒன்றாகக் கட்டிப்போட்டார்.

உலகப் புகழ் பெற்ற ‘Thriller’ என்ற ஆல்பம் மூலம் அவர் இசையை மட்டும் வெளியிடவில்லை – வரலாற்றையே படைத்தார். இசை உலக வரலாற்றில் அதிகம் விற்கப்பட்ட ஆல்பம் இதுதான். மொத்தம் 7 கோடி பிரதிகள் விற்கப்பட்டிருக்கின்றன. Billie Jean, Beat It, Dangerous போன்ற பாடல்கள் வெறும் ஹிட் பாடல்கள் மட்டும் அல்ல. அவை சப்தங்கள், கதை சொல்லல், மேடை நிகழ்ச்சி வடிவம் என அனைத்தையும் புரட்சிகரமாக மாற்றின. அவரது புகழ்பெற்ற “Moonwalk” முதல் மின்னல் போல் சுழலும் நடனங்கள் வரை, அவர் உருவாக்கிய அசைவுகள் மாயாஜாலத்தின் அடையாளமாக அமைந்தன – இப்போது அதனை எண்ணற்றோர் பின்பற்றினாலும் யாராலும் ஒப்பிட முடியாதவை.

michael jackson

மைக்கேல் ஜாக்சனின் you are not alone பாடப்படும் ஒவ்வொரு மேடையிலும் எதாவது ஒரு பெண் ரசிகையை மேடையின் மீது ஏற்றும் ஸ்வாரஸ்யம் நடைபெறும், அவர்கள் மைக்கேலைக் கட்டியணைத்து கதறுவதும், அவர் அப்பெண்னை அரவணைத்த படியே பாடுவதும் நடனமாடுவதும், பவுன்சர்கள் அவர்களை விலக்கிக் கூட்டிச்செல்லும்போது அவர்கள் MJ வை விட்டு பிரிய மறுப்பதும் என சிறிய நாடகத்தன்மை கொண்ட stage show ஆக அது வடிவமைக்கப் பட்டிருக்கும். சில நேரங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கைமீறி அது முழுக்க முழுக்க ரசிகைகள் மைக்கேல் ஜாக்சன் மீது கொண்டிருக்கும் காதலால் நிரம்பி வழியும் உணர்வெழுச்சியான மேடையாக மாறிவிடும் தருணங்களும் உண்டு. குறிப்பாக 1997 ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெகு நேரமாக மைக்கேலின் பெயரைக் கூவியழைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த ரசிகையை மேடையில் ஏற்றியபோது அவர் MJ வை கட்டியனைத்ததும், I Love you MJ என்று பிரார்த்தனை போல கதறியதையும், முத்தமிட்டதையும், மண்டியிட்டு கைப்பிடித்து அழுததையும் யாரும் மறந்திருக்க மாட்டர்கள். அவருடன் நடனமாட கூட்டத்திலிருந்து தேர்வு செய்யப்படும் பெண்களில் ஒருவராக நாம் இருக்க வேண்டும் என நகரம் விட்டு நகரம், நாடு விட்டு நாடு அவரின் கச்சேரிகள் நடைபெறும் இடங்களுக்கு பின் தொடர்ந்தே பயணித்தோர் ஏராளம். மைக்கேல் ஜாக்சன் ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியப்பட்டது.

கருப்பின அமெரிக்கரான மைக்கேல் ஜாக்சனின் They Don't Care About Us என்ற பாடல், பாரபட்சம் மற்றும் வெறுப்பின் வலியைப் பற்றிய ஒரு சமூக உணர்வுள்ள பாடலாக பெரும்புரட்சியை ஏற்படுத்திய பாடல். அநீதிக்கு எதிராகப் போராடுபவர்களின் குரலாகவும், அனைத்து இன மற்றும் சமூகக் குழுக்களின் குரலாகவும் இந்த பாடல் மூலம் தன்னை முன்வைத்தார் MJ. அந்த காலத்து போராட்டக் களங்கள் இந்த பாடலின்றி முற்றுபெற்றதில்லை. மைக்கேல் ஜாக்சனின் Dangerous ஆல்பத்தில் Heal the World பாடலும் அரசியல் சாயம் கொண்டதாகவே பார்க்கப்பட்டது. அரசியல் சர்ச்சைகள் சூழ்ந்தாலும் MJ ஒரு கலைஞராக மட்டும் இல்லாமல், அன்பான மனித நேயராகத் திகழ்ந்தார். Heal the World, Man in the Mirror போன்ற பாடல்கள் வழியாக அமைதி, ஒற்றுமை, கருணை ஆகியவற்றை வலியுறுத்தினார். குழந்தைகள், சுற்றுச்சூழல், ஏழைகள் ஆகியோருக்காக தனது இதயத்தை அர்ப்பணித்தார். அவரது திறமைப்போலவே அவரது கருணையும் அற்புதமானது. எல்லைகள் கடந்து அன்பு செலுத்தவேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

michael jackson

பொது வாழ்க்கையில் மன்னனாக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு உடல், மன ரீதியான பிரச்சனைகளைச் சந்தித்தவர் MJ. சிறு வயதில் தனது தந்தையினால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைப் பருவத்தை தொலைத்த சிறுவன். அவரது குரலில் இருக்கும் மென்வலி ஒவ்வொரு மனித இனத்தின் சொல்ல முடியாத வலியை வெளிக்கொணர்ந்தது. MJ தனது ஒவ்வொரு ரசிகரிடமும் தனிப்பட்ட முறையில் தன் கலை மூலமாக நெருக்கமடைய அதுவே காரணம். மேலும் புகழ் வெளிச்சம் படத் தொடங்கிய காலத்தில் மைக்கேல் ஜாக்சன் "விட்டிலிகோ" (Vitiligo) எனப்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோய் தோலின் நிறமியை இழப்பதால், உடலில் வெண் புள்ளிகள் அல்லது திட்டுகள் உருவாகும். இதை மறைப்பதற்காக அவர் தனது தோலை ப்ளீச் செய்தார் என்றும், பல அறுவை சிகிச்சைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது. அவர் கருப்பினத்தவராக இருந்தாலும் தனது தோற்றத்தை வெள்ளையாக மாற்ற முனைகிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. உடல் முழுதும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. தனக்கு தோல் சார்ந்த நிறமி குறைபாடு பிரச்சனை உள்ளதையும் அது தன்னால் கட்டுப்படுத்த இயலாத ஒன்றென்றும், மக்களின் இதுபோன்ற விமர்சனங்கள் தன்னை காயப்படுத்துவதாகவும் வெளிப்படையாக பேசியிருந்தார். தான் ஒரு கருப்பின அமெரிக்கன் என்பதில் பெருமையும் கர்வமும் அடைவதாக குறிப்பிட்டார்.

தனது 50 வயதிலேயே இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் அவர் தந்த இசையைபோல் வேறேதுமில்லை. அவர் விட்டுச் சென்ற இடம் எப்போதும் யாராலும் நிரப்பப்படப் போவதுமில்லை. பாப் இசையின் நிரந்தர மன்னனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். Long Live MJ