கிங் ஆஃப் பாப்.... மைக்கேல் ஜாக்சன் நினைவு நாள் இன்று!
மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகள் நளினமானவை... மூன் வாக் நடையால் பார்ப்போர் மனதை பறவையாக்குவார்... மேடையில் திடீரென கீழே சாய்ந்து மெய்சிலிர்க்க வைப்பார்... இயந்திரம் போல சுற்றிச்சுழன்று பரவசப்படுத்துவார்.
நடனத்தில் பல புதுமைகளைப் படைத்தவர் மைக்கேல் ஜாக்சன். இவரே எழுதி இசையமைத்து, நடித்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார். 1982ஆம் ஆண்டில் வெளியான இவரது த்ரில்லர் ஆல்பம் இன்றுவரைக்கும் ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி உலகின் நம்பர் ஒன் பாப் ஆல்பம் என்ற பெயரை பெற்றுள்ளது த்ரில்லர்.
BAD, டேஞ்சரஸ், ஹிஸ்டரி போன்ற ஆல்பங்களும் பாப் உலகில் அழுத்தமான முத்திரை பதித்தவை. வாழ்ந்தது 50 ஆண்டுகள்தான் என்றாலும் அதில் 40 ஆண்டுகள் புகழ் வெளிச்சத்தில் இருந்தவர்.
ஆனால், 2003ஆம் ஆண்டுக்குப் பின் அவரது வாழ்க்கை முற்றிலும் துயரம் நிறைந்ததாக மாறியிருந்தது. போதை, உடல் பிரச்சினைகள், கடன், வழக்குகள் என உழன்றது வாழ்க்கை. அது 2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி. உலக சுற்றுப்பயணம் தொடங்க ஒரு வார காலமே இருந்தபோது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜாக்சனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
மயக்க மருந்துகளையும் வலி நிவாரணியையும் அதிகமாகக் கொடுத்ததால் ஜாக்சன் இறந்துபோனதாகக் கூறப்பட்டது. INVINCIBLE, THRILLER, BAD, DANGeUROUS, SCREAM, IMMORTAL, HISTORY போன்ற மைக்கேல் ஜாக்சனின் ஆல்பங்களின் பெயர்களை வைத்தே அவரது வாழ்க்கையை வர்ணித்துவிடலாம் என்பது வினோதமான ஒன்று.